மாமன்ற அணுகுமுறையின் வெற்றிக்கு செவிமடுத்தலும் உரையாடலும் அடித்தளம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மாமன்ற அணுகுமுறைக்கு செவிமடுத்தல், பணிவு மற்றும் உரையாடல் ஆகியன இன்றியமையாத கூறுகள் என்பதை கர்தினால் மரியோ கிரேச் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் 27, சனிக்கிழமையன்று இடம்பெற்ற சிறப்புநிலை கர்தினால்கள் ஆலோசனை அவைக் கூட்டத்தின் நான்காவது அமர்வில் உரையாற்றியபோது இவ்வாறு கூறியுள்ள
மாமன்றத்தின் பொதுச் செயலரான கர்தினால் மரியோ கிரேச் அவர்கள், போரினாலும் வற்புறுத்தலாலும் சூழப்பட்ட உலகிற்கு இவை நம்பிக்கையூட்டும் மாற்றமாக அமைகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021-ல் தொடங்கப்பட்ட ஒன்றாகப் பயணிக்கும் திருஅவை குறித்த மாமன்ற அணுகுமுறை பற்றி விவரித்த கர்தினால் கிரேச் அவர்கள், மாமன்ற அணுகுமுறை எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்ததாகவும் அதற்கு திருஅவையின் பல்வேறு பிரிவினரையும் செவிமடுத்தல் மற்றும் விவேகத்தோடு செயல்முறைகளில் ஈடுபடுத்தியதுதான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
சவால்கள் மற்றும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், பங்கேற்பாளர்கள் அனைவரும் "இணைந்து பயணிக்கும்" பொதுவான விருப்பத்தையும், நம்பிக்கையாளர்கள் அனைவரின் கொடைகளையும் பொறுப்புகளையும் மதிக்கும் மனப்பான்மையையும் வெளிப்படுத்தினர்" என்று கர்தினால் கிரேச் அவர்கள் கூறியுள்ளார்.
"தற்போது மாமன்ற அணுகுமுறை அதன் செயல்படுத்துதல் கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக வலியுறுத்திய அவர், இது முடிவுகளை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் சமூகங்களுக்குள் மாமன்ற அணுகுமுறை சார்ந்த புரிதல்கள் முதிர்ச்சியடைய உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் "ஆவியில் உரையாடல்" (Conversation in the Spirit) என்ற முறையைப் பின்பற்றி, திருஅவைகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இறைவனின் ஒரே மக்கள் என்ற உணர்வை ஆழப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகின்றன" என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் "2028 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள திருஅவைக் கூட்டத்தை நோக்கிய இந்த செயலாக்க நடைமுறை, நினைவு கூர்தல், விளக்குதல், திசைவழிப்படுத்துதல் மற்றும் கொண்டாடுதல் ஆகிய நான்கு முக்கிய செயல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது" என்றும் "இந்த நிலைகள், கூட்டொருங்கியக்கப் பயணத்தின் பலன்களை சமூகங்கள் ஏற்றுக்கொண்டு, புரிந்துகொண்டு, செயல்படுத்தி, கொண்டாட உதவுகின்றன" என்றும் கர்தினால் கிரேச் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த செயல்முறையில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள், குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுநிலையினர் ஆற்றிவரும் முக்கியப் பங்கை எடுத்துரைத்த கர்தினால் கிரேச் அவர்கள், "மாமன்ற அணுகுமுறை என்பது திருஅவை மனிதகுலத்தின் கவலைகளைக் கேட்டு, தனது முன்னேற்றப் பாதையை ஒன்றாகத் தீர்மானிக்க உதவும் ஒரு வலிமையான மறைப்பணி சார்ந்த வள ஆதாரம்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.