வெனிஸ் பைனாலே திருவிழாவில் திருப்பீடத்தின் ‘ஒலி வழிபாட்டு’ காட்சிக்கூடம் திறப்பு!

61-வது வெனிஸ் பைனாலே கலைத் திருவிழாவில், ‘செவியே ஆன்மாவின் கண்’ எனும் கருப்பொருளில் அமைந்த திருப்பீடத்தின் காட்சிக்கூடம் (Holy See Pavilion) மே 8 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. புகழ்பெற்ற கலைஞர் பட்டி ஸ்மித் மற்றும் ஒலிநடை கலைக்குழு இணைந்து வழங்கிய இந்த ‘ஒலி வழிபாட்டு’ நிகழ்வு, வரலாற்றுச் சிறப்புமிக்க நசரேத்து அன்னை மரியா ஆலயத்தில் அரங்கேறியது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

61-வது வெனிஸ் பைனாலே திருவிழாவின் ஒரு பகுதியாக, திருப்பீடத்தின் காட்சிக்கூடம் (Holy See Pavilion) மே 8, வெள்ளியன்று ஒலி வழிபாட்டு கலையுடன் திறந்து வைக்கப்பட்டது. ஒலியை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கலைப்படைப்பை, புகழ்பெற்ற கலைஞர் பட்டி ஸ்மித் அவர்கள் ஒலிநடை குழுவுடன் இணைந்து தயாரித்துள்ளார். வெனிஸ் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க நசரேத்து அன்னை மரியா ஆலயத்தில் இந்தத் தொடக்க நிகழ்வு அரங்கேறியது.

 “செவியே ஆன்மாவின் கண்" என்று கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்த காட்சிக்கூடத்தின் முதல் நிகழ்வாக இந்த கலை நிகழ்வு இடம்பெற்றது. இது பார்வையாளர்களை கேட்பதின் வழியாக ஒரு ஆன்மீகப் பயணத்திற்கு அழைத்துச்  சென்றது. மே 9-இல் தொடங்கி நவம்பர் 22 வரை நடைபெறும் இந்த முன்னெடுப்பு, ஒலியை ஓர் இசை வடிவம் என்பதையும் கடந்து, ஆழமான மானுட மற்றும் ஆன்மீக அனுபவமாக வெளிப்படுத்துகிறது.

ஒலியை ஆன்மாவிற்கும் பிரபஞ்சத்திற்கும் இடையிலான ஒரு இணைப்புக் கருவியாகக் கருதிய இடைக்கால ஆன்மீகவாதியும் திருஅவையின் மறைவல்லுநருமான பிங்கன் நகரின் புனித ஹில்டெகார்ட் அவர்களின் கருத்துக்களால் பெருமளவில் ஈர்க்கப்பட்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பட்டி ஸ்மித் அவர்களின் கவிதை மற்றும் ஆன்மீகம் சார்ந்த நீண்டகாலக் கலைப் பயணமே, ஹில்டெகார்டின் அவர்களின் கருத்திற்கு உயிர் கொடுக்க அவரை ஒரு சிறந்த தேர்வாக மாற்றியது என்று இந்நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களான ஹான்ஸ் உல்ரிச் ஓப்ரிஸ்ட் மற்றும் பென் விக்கர்ஸ் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தொடக்க விழாவை ஒரு "நெருக்கமான சந்திப்பு" என்று விவரித்த பொறுப்பாளர்கள், மாற்றத்திற்கான ஆற்றலாக விளங்கும் மனிதக் குரலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் காட்சிக் கூடத்திற்கு இது ஒரு ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் சூழலை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 மே 2026, 12:13