வத்திக்கான் ஆய்வகத்தின் 135 ஆண்டுகால சாதனை வத்திக்கான் ஆய்வகத்தின் 135 ஆண்டுகால சாதனை 

வத்திக்கான் ஆய்வகத்தின் 135 ஆண்டுகால சாதனை

உரோமில் உள்ள ஏஞ்சலோ செச்சியின் கட்டமைப்புகள் உள்பட முன்பிருந்த பல வசதிகளை இழந்து நின்ற வத்திக்கான் ஆய்வகத்திற்கு அவர் புத்துயிர் அளித்ததன் காரணமாக அவரது பெயர் சிறுகோளுக்கு சூட்டப்பட்டுள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

வத்திக்கானின் விண்வெளி ஆய்வகம் திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அவர்கள் உள்ளிட்ட அந்த ஆய்வகத்தின் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய நபர்களின் பெயர்களை நான்கு சிறுகோள்களுக்கு சூட்டியுள்ளது.

1891-ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தை மீண்டும் நிறுவிய திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

(858334) ஜியோச்சினோபெசி, (836955) லாய்ஸ், (836275) பியத்ரோமாஃபி மற்றும் (688696) பெர்தியூ ஆகிய சிறுகோள்கள் அரிசோனாவில் உள்ள வத்திக்கானின் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட தொலைநோக்கியைப் பயன்படுத்தி காசிமியராஸ் செர்னிஸ் மற்றும் ரிச்சர்ட் பி. பாயல் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காரணமாக, இவர்களுடைய பெயர்கள் அனைத்துலக வானியல் ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

"ஜியோச்சினோபெசி எனும் சிறுகோளுக்கு தற்பொழுது திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. உரோமில் உள்ள ஏஞ்சலோ செச்சியின் கட்டமைப்புகள் உள்பட முன்பிருந்த பல வசதிகளை இழந்து நின்ற வத்திக்கான் ஆய்வகத்திற்கு அவர் புத்துயிர் அளித்ததன் காரணமாக அவரது பெயர் சிறுகோளுக்கு சூட்டப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் ஒளி மாசுபாடு காரணமாக இந்த ஆய்வகம் பின்னர் காஸ்தல் கந்தோல்போவிற்கு மாற்றப்பட்டு இறுதியில் அரிசோனா வரை விரிவுபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

19-ஆம் நூற்றாண்டின் 'வானத்தின் வரைபடம்' (Carte du Ciel) திட்டத்தில் பணியாற்றிய ஜியூசெப் லாய்ஸ், ஆய்வகத்தை வழிநடத்திய பியட்ரோ மாஃபி மற்றும் ஒளி மாசு ஆய்வுகளில் முன்னோடியான புளோரண்ட் பெர்டியூ ஆகியோரின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, மீதமுள்ள மூன்று சிறுகோள்களுக்கு இவர்களது பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பானது "இறைநம்பிக்கையும் அறிவியலும் ஒன்றோடொன்று இணக்கமானவை" என்ற திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்களின் கருத்தை பிரதிபலிப்பதாக அமைகிறது. மேலும் வத்திக்கான் ஆய்வகமும் உலகம் முழுவதும் மேம்பட்ட வானியல் ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 மே 2026, 12:48