திருத்தந்தையர் அறக்கட்டளை திருத்தந்தையர் அறக்கட்டளை  (@Vatican Media)

திருத்தந்தையர் அறக்கட்டளையின் உரோமை புனிதப் பயணம்!

ஏப்ரல் 29 முதல் மே 2 வரை நடைபெற்ற திருத்தந்தையர் அறக்கட்டளையின் உரோமை புனிதப் பயணம், ஆன்மீக மேம்பாட்டையும் பணிகளுடன் தொடர்புடைய சந்திப்புகளையும் ஒருங்கிணைத்தது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 29 முதல் மே 2 வரை,  திருத்தந்தையர்  அறக்கட்டளை உரோமிற்கு ஒரு ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்கிறது. இது ஆன்மீகப் பயிற்சியையும், தீருப்பீடத்தின் நிர்வாகப் பணிகளுடன் தொடர்புடைய சந்திப்புகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

 'தூய கன்னி மரியா மற்றும் வானதூதர்கள்' பேராலயத்தில் பேராயர் ஜேம்ஸ் செச்சியோ அவர்கள் ஆற்றிய திருப்பலியுடன் தொடங்கிய இந்தத் திட்டத்தில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் திருத்தூதர்களாகச் செயல்படுமாறு அங்குள்ள நம்பிக்கையாளர்களைக்  கேட்டுக்கொண்டார்.

பங்கேற்பாளர்கள் வத்திக்கான் வானொலி மற்றும் வத்திக்கான் செய்திகள் (Vatican News) அலுவலகங்களைப் பார்வையிட்டனர்; இந்த நிகழ்வின் ஒரு சிறப்பம்சமாக 'வத்திக்கான் செய்திகள் விட்ஜெட்' (Vatican News widget) அறிமுகப்படுத்தப்பட்டது; இதனை நற்செய்தி அறிவிப்பு மற்றும் உலகளாவிய இணைப்பிற்கான ஒரு கருவி என திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் குறிப்பிட்டார். மேலும், உறுப்பினர்கள் திருத்தூதரகத்திற்கான அமெரிக்கத் தூதரகத்திற்கும் (U.S. Embassy to the Holy See) சென்றனர்."

அங்கு இடம்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் தலைவர் வார்ட் ஃபிட்ஸ்ஜெரால்ட் திருஅவையை ஆதரிப்பதும் ஏழைகளுக்கு உதவுவதுமே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்று வலியுறுத்திக் கூறினார்.

துணைத் தலைவர் டிம் ரிஸ்டாஃப், குறிப்பாக ஆப்பிரிக்காவில் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான மானியங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட முக்கிய பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தினார்.

மேலும் அமெரிக்காவின் நியூயார்க் உயர்மறைமாவட்டத்தின் பேராயரான கர்தினால் திமோதி டோலன் அவர்கள், அகில உலக திருஅவைக்கு சேவை செய்வதில் இந்த அறக்கட்டளையின் பங்கினை கோடிட்டுக்காட்டினார்.

1988 ஆம் ஆண்டு முதல், இந்த அறக்கட்டளை 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் 270 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையை விநியோகித்துள்ளது; இதன் மூலம் தேவாலயங்கள், பள்ளிகள், மருத்துவம் மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கு ஆதரவு அளித்துள்ளது. புதிய நன்கொடையாளர்கள் அதன் உலகளாவிய தொண்டுப் பணியை வலுப்படுத்தி வருவதால், இந்த வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 மே 2026, 12:57