தேடுதல்

அணு ஆயுதப் பெருக்க தடை ஒப்பந்தத்தின் 11-வது ஆய்வு மாநாடு அணு ஆயுதப் பெருக்க தடை ஒப்பந்தத்தின் 11-வது ஆய்வு மாநாடு  

அமைதியை அடைவதற்கான ஒரே உண்மையான வழி ஆயுதக் குறைப்பு!

நியூயார்க்கில் நடைபெறும் அணு ஆயுதப் பெருக்க தடை ஒப்பந்தத்தின் (NPT) 11-வது ஆய்வு மாநாட்டில், ஐக்கிய நாடுகள் அவைக்கான திருப்பீடத்தின் தூதுக்குழு ஆற்றிய உரையில் அணு ஆயுத ஒழிப்பு என்பது வெறும் விருப்பமல்ல, அது நாடுகள் நிறைவேற்ற வேண்டிய தார்மீகக் கடமை என்று திருப்பீடம் தெரிவித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதென்பது வெறும் முழக்கத்தோடு நின்றுவிடக்கூடாது என்றும், அது உறுதியான மற்றும் வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய தார்மீகக் கடமை என்றும் திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.

நியூயார்க்கில் ஏப்ரல் 27 முதல் மே 22 வரை இடம்பெறும் 'அணு ஆயுதப் பெருக்க தடை ஒப்பந்தத்தின்' (NPT) 11-வது ஆய்வு மாநாட்டில், ஐக்கிய நாடுகள் அவைக்கான திருப்பீடத்தின் நிரந்தரத் தூதுக்குழு ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

நீதியான, பாதுகாப்பான மற்றும் நிலையான அமைதி நிலவ வேண்டுமானால் ஆயுதக் குறைப்பு மிக அவசியம் என்றும், அதன் இறுதி இலக்காக அணு ஆயுத ஒழிப்பு அமைய வேண்டும் என்றும் திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.

அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் (TPNW) இந்த இலக்கை அடைய உதவும் ஒரு முக்கியமான கருவி என்று சுட்டிக்காட்டியுள்ள திருப்பீடம், அனைத்து நாடுகளும் இதில் இணைய வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளது.

அணு ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவுகள் ஒரு குறிப்பிட்ட நாட்டுடன் முடிந்துவிடுபவை அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள திருப்பீடம், அவை காலத்தையும் தேச எல்லைகளையும் தாண்டி மனிதாபிமானத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஈடுசெய்ய முடியாத சேதத்தை விளைவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

உலகளவில் பதற்றங்கள் அதிகரித்து வரும் இவ்வேளையில், அமைதிக்கான அடிப்படைக் கொள்கைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமெனத் திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் பயம், மிரட்டல் மற்றும் ஒருவரையொருவர் அழிக்கும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மேல் கட்டியெழுப்பப்படும் எந்தவொரு அமைப்பும் ஒருபோதும் உண்மையான நிலைத்தன்மையை வழங்க முடியாது என்று அது எச்சரித்துள்ளது.

அணு ஆயுதம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட சொல்லாடல்கள், ஆயுதக் கிடங்குகளின் நவீனமயமாக்கல் மற்றும் பலவீனமடைந்து வரும் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட கவலைக்குரிய போக்குகளையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இறுதியாக, அணு ஆயுதக் கட்டமைப்பு மற்றும் அதன் இயக்க முறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுவது குறித்து திருப்பீடம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இத்தகைய ஆபத்துக்களைக் குறைக்க நாடுகளிடையே வெளிப்படைத்தன்மை நிலவ வேண்டும் என்றும், அணு ஆயுதங்களைச் சார்ந்திருக்கும் போக்கைக் கைவிட்டு ஆக்கபூர்வமான உரையாடல்களில் ஈடுபட வேண்டும் என்றும் திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 மே 2026, 14:12