செய்தியாளர்கள் சந்திப்பில் கர்தினால் பரோலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கர்தினால் பரோலின்   (ANSA)

அமைதி மற்றும் ஆயுதக்குறைப்பு குறித்த திருஅவையின் நிலைப்பாடு உறுதியானது!

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை திருத்தந்தை ஆதரிப்பார் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கருத்தை திட்டவட்டமாக மறுத்த கர்தினால் பரோலின், அணு ஆயுதம் தொடர்பான வத்திக்கானின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது என்று குறிப்பிட்டுள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

திருப்பீடம் எப்போதும் அணு ஆயுதக் குறைப்பையே ஆதரித்து வருவதாகவும், அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்களை ஊக்குவிப்பதாகவும் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மே 06, புதன்கிழமையன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள்  எழுப்பிய  கேள்விகளுக்கு பதிலளித்த போது திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

"நீங்கள் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோவை அதிகம் நம்புகிறீர்களா அல்லது ட்ரம்பை நம்புகிறீர்களா?" என்று செய்தியாளர்கள்  எழுப்பிய  கேள்விக்கு, கர்தினால் பரோலின் அவர்கள், "நான் நம் இறைவன் இயேசு கிறிஸ்துவை மட்டுமே நம்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை திருத்தந்தை அவர்கள் ஆதரிப்பார் என்றும், அது கத்தோலிக்கர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த கருத்தை திட்டவட்டமாக மறுத்த கர்தினால் பரோலின் அவர்கள், அணு ஆயுதம் தொடர்பான திருப்பீடத்தின்  நிலைப்பாடு மிகவும் தெளிவானது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ட்ரம்பை நேரடியாக விமர்சிக்காமல், "திருத்தந்தை என்பவர் திருத்தந்தை தான்" என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது பணியை நேர்மையுடனும் உண்மையுடனும் செய்து வருகிறார் என்று விளக்கியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோவுடன் திருப்பீடத்தில் நடைபெறவுள்ள சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய கர்தினால் பரோலின் அவர்கள், திருப்பீடம்  முதலில் ரூபியோவின் கருத்துக்களைக் கேட்டறிந்து, பின்னர் மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, கியூபா மற்றும் குறிப்பாக ஈரான் உள்ளிட்ட முக்கிய பன்னாட்டு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடலில் ஈடுபட உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மோதல்கள் வன்முறை மூலம் அல்லாமல், நேர்மையான உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்ற திருப்பீடத்தின் நிலையான அணுகுமுறையை கர்தினால் பரோலின் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

பதற்றங்கள் நிலவினாலும், உலகளாவிய செல்வாக்கு காரணமாக அமெரிக்கா வத்திக்கானுக்கு ஒரு முக்கியமான உரையாடல் துணையாகத் தொடர்கிறது" என்றும் வலியுறுத்தியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள்,  "மேலும், கோரிக்கை விடுக்கப்பட்டால் அதிபர் ட்ரம்ப் அவர்களுடன் நேரடியாகப் பேச திருத்தந்தை தயாராக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, ஒரே பாலினத் தம்பதிகளுக்கு ஆசீர் அளிப்பது மற்றும் ஆயர் மன்றக் கூட்டங்கள் தொடர்பாக ஜெர்மன் ஆயர்களுடன் நடந்து வரும் விவாதங்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய கர்தினால் பரோலின்  அவர்கள், இத்தகைய கருத்து வேறுபாடுகள், உரையாடல், திருஅவையின் பாரம்பரியம், திருஅவைச் சட்டம் மற்றும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் வழிகாட்டுதல்கள் மூலம் அமைதியாகத் தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 மே 2026, 11:59