தேடுதல்

நவீன மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த - சம்பாலிமாட் இடையே ஒப்பந்தம் நவீன மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த - சம்பாலிமாட் இடையே ஒப்பந்தம் 

நவீன மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த குழந்தைகள் இயேசு மருத்துவமனை - சம்பாலிமாட் இடையே ஒப்பந்தம்!

புற்றுநோய் மற்றும் தற்காப்பு மண்டல நோய்களுக்கான CAR T-செல் போன்ற நவீன சிகிச்சைகளை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இத்தகைய விலையுயர்ந்த சிகிச்சைகள், வசதி குறைந்த நிலையில் உள்ள நோயாளிகளுக்கும் எளிதாகக் கிடைப்பதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சிகிச்சை (Immunotherapy) ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, குழந்தைகள் இயேசு மருத்துவமனை மற்றும் 'சம்பாலிமாட்' அறக்கட்டளை (Fundação Champalimaud) இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

புத்தாக்க மருத்துவ சிகிச்சைகளுக்கான உலகளாவிய கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், உரோமில் ஏப்ரல் 28, செவ்வாயன்று, மரியா லியோனர் பெலேசா மற்றும் திசியானோ ஓனெஸ்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

புற்றுநோய் மற்றும் தற்காப்பு மண்டல நோய்களுக்கான CAR T-செல் போன்ற நவீன சிகிச்சைகளை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இத்தகைய விலையுயர்ந்த சிகிச்சைகள், வசதி குறைந்த நிலையில் உள்ள நோயாளிகளுக்கும் எளிதாகக் கிடைப்பதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், இது அறிவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்லாமல், நீதி, ஒற்றுமை மற்றும் மனித வாழ்வின் மீதான மரியாதை ஆகியவற்றில் வேரூன்றியது என்று குறிப்பிட்டார்.

மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தவும், அவற்றை உலகெங்கும் கொண்டு செல்லவும் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வர் என்றும், இதன் மூலம் இரத்தப் புற்றுநோய் மற்றும் திடக் கட்டிகள் (Solid tumors) போன்ற தீர்க்க முடியாத நோய்களுக்குப் புதிய சிகிச்சை முறைகளைக் கண்டறிய முடியும் என பேராசிரியர் பிராங்கோ லோகாடெல்லி அவர்கள் தெரிவித்தார்.

மேலும் இந்த ஒப்பந்தமானது, சம்பாலிமாட் அறக்கட்டளையின் பெரியோர்களுக்கான புற்றுநோயியல் நிபுணத்துவத்தையும், குழந்தைகள் இயேசு மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவ சிறப்புத் திறனையும் ஒருங்கிணைக்கிறது. இது ஆராய்ச்சியில் தொடங்கி நோயாளி பராமரிப்பு வரையிலான 'மொழிபெயர்ப்பு மருத்துவத்தில்' (Translational medicine) முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.

உலகளாவிய அளவில் அறநெறி சார்ந்த அறிவியல் வளர்ச்சி மற்றும் சமமான மருத்துவ வசதியை உருவாக்குவதே இந்த கூட்டாண்மையின் இலக்காகும். இது நோயாளிகளின் வாழ்வை மாற்றியமைக்கக்கூடிய நவீன சிகிச்சை முறைகளை மேம்படுத்தி, உலகெங்கும் கொண்டு செல்ல உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 மே 2026, 13:39