அமைதிப் பணியில் தளராத திருத்தந்தை
ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்
திருத்தந்தை நற்செய்தியையும் அமைதியையும் பறைசாற்றும் தனது பணியை “opportune et importune” அதாவது, காலம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் (சூழல் சாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்' என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
புனித பியோ அடிகள் (St. Padre Pio) 1956-ஆம் ஆண்டு சான் ஜியோவானி ரோட்டோண்டோவில் (San Giovanni Rotondo) நிறுவிய காசா சொல்லியேவோ தெல்லா சோஃபெரென்சா (Casa Sollievo della Sofferenza) மருத்துவமனையின் 70-வது ஆண்டு விழாவில், இவ்வாறு கர்தினால் பரோலின் அவர்கள் தெரிவித்தார். இன்று, இந்த மருத்துவமனை தெற்கு இத்தாலியின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகவும், சிறந்த மருத்துவச் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு பெயர் பெற்றதாகவும் திகழ்கிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ அவர்கள் (Marco Rubio) வத்திக்கானில் திருத்தந்தையைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்த சில நாட்களுக்கு முன்னதாக, அமெரிக்க அரசு தலைவர் டொனால்ட் டிரம்ப், திருத்தந்தை பதினான்காம் ம் லியோ அவர்களுக்கு எதிராக மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடுத்திருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போது கர்தினால் பரோலின் அவர்கள் இந்த முக்கியக் கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், "இதற்குத் திருத்தந்தை மீண்டும் ஒருமுறை பதிலளிப்பாரா என்பது தமக்குத் தெரியவில்லை என்றும், ஆப்பிரிக்காவிற்கான திருத்தூதுப் பயணத்தின் போது, விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோதே இது போன்ற விவகாரங்களுக்குத் அவர் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டார் என்றும் சுட்டிக்காட்டியதுடன், திருத்தந்தையின் அந்தச் செய்தியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
திருத்தந்தையின் முந்தைய பதில் கிறிஸ்தவ விழுமியங்களுக்கு உகந்த ஒரு பதில் என்று எடுத்துக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், வலியுறுத்தினார். அமைதியைப் போதிப்பது திருத்தந்தையின் கடமை என்றும், அவர் அந்தப் பணியைத்தான் செய்கிறார் என்றும் விளக்கமளித்து, மக்கள் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பது வேறு விஷயம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்