வியட்நாம் ஆயர்களுடன் திருத்தந்தை வியட்நாம் ஆயர்களுடன் திருத்தந்தை   (ANSA)

வியட்நாம் ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு

ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆயர்கள் உரோம் நகருக்கு மேற்கொள்ளும் மரபுவழிப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. இது திருத்தந்தையுடனான உறவை வலுப்படுத்துவதையும், திருத்தூதர்களின் கல்லறைகளில் இறைவேண்டல் செய்வதையும் நோக்கமாகக் கொண்டது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஆப்பிரிக்காவில் பதினொரு நாட்கள் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தூதுப் பயணத்தை முடித்துக்கொண்டு வத்திக்கான் திரும்பிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், மீண்டும் தனது அன்றாடப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடக்கமாக, வியட்நாம் நாட்டு ஆயர் குழுவினரை அவர் சந்தித்து உரையாடினார்.

மறைமாவட்ட ஆயர்கள் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை உரோம் நகருக்கு மேற்கொள்ளும் 'அட் லிமினா' எனும் வழக்கமான திருப்பயணத்தின் ஒரு பகுதியாகவே வியட்நாம் ஆயர்களின் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

இப்பயணமானது, ஆயர்களுக்கும் திருத்தந்தைக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்துவதுடன், திருத்தூதர்களான புனித பேதுரு மற்றும் புனித பவுல் ஆகியோரின் கல்லறைகளில் இணைந்து இறைவேண்டல் செய்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

திருத்தந்தையடனான இந்தச் சந்திப்பு மிகுந்த அன்புடனும் சகோதர வாஞ்சையுடனும் அமைந்தது என்று கூறிய ஆயர் டொமினிக் நுயென் துவான் அன் அவர்கள், பயணக் களைப்பு இருந்தபோதிலும், திருத்தந்தை தங்களை இன்முகத்துடன் வரவேற்று, வியட்நாம் திருஅவையின் வளர்ச்சி குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்தார் என்றும், அந்தச் சூழல், இறைப்பணியால் பிணைக்கப்பட்ட ஓர் உன்னதக் குடும்பத்தைப் போல உணர வைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஆசியாவின் மிகப்பெரிய கத்தோலிக்க சமூகங்களில் ஒன்றாகத் திகழும் வியட்நாமின் எழுபது இலட்சம் விசுவாசிகளின் ஆழமான விசுவாசத்தையும், அவர்களின் துடிப்பான ஆன்மீக வாழ்வையும் கண்டு திருத்தந்தை மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஆயர் டொமினிக் நுயென் துவான் அன் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் ஊடகங்களின் சவால்களை எதிர்கொள்ள, திருஅவையின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆயர் டொமினிக் நுயென் துவான் அன் அவர்கள் வலியுறுத்தினார்.

மேலும் குடும்பப் பிணைப்பை அடித்தளமாகக் கொண்ட வியட்நாம் திருஅவை, நவீன கால சவால்களுக்கு நம்பிக்கை மற்றும் எதிர்நோக்குடன் பதிலளிக்க விரும்புவதாகவும், இறைவனின் அருளால் தங்களது பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 ஏப்ரல் 2026, 11:37