படைப்பின் பாதுகாப்பில் குடும்பங்களின் பங்கு
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
சுயநலமின்மை, பொறுமை, ஒற்றுமை மற்றும் வாழ்வின் மீதான மதிப்பு போன்ற விழுமியங்களைக் கற்றுக்கொள்ளும் சமூகத்தின் அடித்தளமாகத் திகழ்வது குடும்பங்களே என்றும், மக்களையும் சுற்றுச்சூழலையும் பேணுவதற்கு இந்த விழுமியங்கள் மிகவும் அவசியமானவை என்றும் ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டுக்கானத் திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் மைக்கேல் செர்னி மற்றும் பொதுநிலையினர் மற்றும் குடும்ப வாழ்வுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் கெவின் ஃபாரெல் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
“குடும்ப வாழ்வில் ஒருங்கிணைந்த சூழலியல்” (Integral Ecology in the Life of the Family) என்ற தலைப்பில் அண்மையில் வத்திக்கானால் வெளியிடப்பட்ட புதிய ஆவணத்தில், கர்தினால் மைக்கேல் செர்னி மற்றும் கர்தினால் கெவின் ஃபாரெல் ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்த ஆவணம் படைப்புகளையும் மனித வாழ்வையும் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மூலம் பராமரிக்க குடும்பங்களை ஊக்குவிக்கிறது.
பூமி மற்றும் ஏழைகளின் அழுகுரலுக்குச் செவிசாய்க்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ ஆகியோர் விடுத்த வேண்டுகோள்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த ஆவணம் அமைந்துள்ளது.
'அன்பின் மகிழ்வு' (Amoris Laetitia) மற்றும் 'இறைவா உமக்கே புகழ்' (Laudato si’) ஆகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது மடல்களை அடிப்படையாகக் கொண்டு, ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான திருப்பீடத்துறையும், பொதுநிலையினர், குடும்ப வாழ்விற்கான திருப்பீடத்துறையும் இணைந்து இறையியலாளர்கள் மற்றும் குடும்ப வாழ்வில் உள்ளவர்களின் பங்களிப்புடன் இந்த ஆவணத்தைத் தயாரித்துள்ளன.
இந்த ஆவணம் குடும்பங்கள், திருஅவை அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் ஆன்மீகத்தையும் சமூகப் பொறுப்பையும் எவ்வாறு இணைக்கலாம் என்பதற்கான ஒரு செயல்முறை வரைபடமாக விளங்குகிறது.
இந்த ஆவணத்தின் இரண்டாம் பகுதி, 'இறைவா உமக்கே புகழ்' (Laudato Si') என்ற திருத்தூது மடலின் அடிப்படையில் சூழலியல் வாழ்வு, ஏழைகள் மீதான அக்கறை மற்றும் சுற்றுச்சூழல் கல்வி உள்ளிட்ட ஏழு முக்கிய இலக்குகளை முன்வைக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் தெளிவான விளக்கங்கள், சிந்தனைகள் மற்றும் நடைமுறைச் செயல்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இது குடும்பங்களைச் செயல்பட ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கையைப் பாதுகாப்பதும் மனித மாண்பைப் பேணுவதும் சாதி, மத பேதமின்றி அனைவருக்குமான பொதுவான கடமை என்பதையும் வலியுறுத்துகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்