போரினால் வாடும் குழந்தைகளுக்காகக் கரம் கோர்க்கும் போப்மொபைல்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
கிறிஸ்தவ வாழ்வின் முதுகெலும்பாக விளங்கும் பிறரன்புப் பணி, வெறும் சொல்லால் அல்லாமல் செயல் மற்றும் சேவையின் வழியாகவே வெளிப்பட வேண்டும் என்று பிறரன்புப் பணிக்கான திருப்பீடத்துறையின் தலைவர் பேராயர் லூயிஸ் மரின் டி சான் மார்ட்டின் அவர்கள் தெரிவித்துள்ளார். பிறரன்புப் பணிக்கான திருப்பீடத் துறையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ஒரு புதிய முயற்சியைக் குறித்துப் பேசியபோது இவ்வாறு வலியுறுத்தினார்.
ஏப்ரல் 28, செவ்வாயன்று, பேராயர் மார்ட்டின் அவர்கள் திருச்சிலுவை கத்தோலிக்கச் சேவை அமைப்பின் தலைவரிடம் திருத்தந்தை வாகனம் (Popemobile) ஒன்றை ஒப்படைத்தார். இது அமெரிக்க கத்தோலிக்க வீரர்கள்: நம்பிக்கையை நோக்கிய பயணம் என்ற திட்டத்தின் தொடக்கமாகும்.
அமெரிக்கா முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள இந்த 3,700 மைல் பயணம், போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் நலிந்த மக்களுக்கு ஆதரவளிப்பதையும், அதே நேரத்தில் இறைவேண்டல் மற்றும் ஒருமைப்பாட்டை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நம்பிக்கையின் வாகனம்' (Hopemobile) என்று பெயர் மாற்றப்பட்டுள்ள இந்த திருத்தந்தை வாகனம், 2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நியூயார்க் முதல் கலிபோர்னியா வரை 13 நகரங்களுக்குப் பயணம் செய்யும். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பெரிய அளவிலான அறக்கட்டளை ஏலம் ஒன்றும் நடைபெற உள்ளது. இதில் திரட்டப்படும் நிதி, வறியவர்களுக்காக திருப்பீடத்துறை செய்யும் பணிகளுக்காகச் செலவிடப்படும்.
இந்தச் செயல் ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ்வதுடன், திருத்தந்தையுடனான உறவை வலுப்படுத்துவதாகவும், நற்செய்தி அறிவிப்பை ஊக்குவிப்பதாகவும் அமைகிறது என்று பேராயர் மரின் அவர்கள் குறிப்பிட்டார்.
ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, உலகம் முழுவதும் செயல்பட்டு நலவாழ்வு, கல்வி, விவசாயம் மற்றும் ஆன்மீகப் பராமரிப்பு தொடர்பான திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகிறது.
தொடக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட இந்த முயற்சி, மிகவும் ஏழ்மையானவர்களிடம் கிறிஸ்து குடி கொண்டுள்ளார் என்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் போதனையைப் பிரதிபலிக்கிறது. மேலும், அவர்களுக்கு அன்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுமாறு திருஅவைக்கு இது அழைப்பு விடுக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்