கர்தினால் பியத்ரோ பரோலின் கர்தினால் பியத்ரோ பரோலின்   (ANSA)

செயற்கை நுண்ணறிவு காலத்தில் அறநெறிச் சிந்தனை அவசியம்

எண்ணிம தலத்தின் முன்னேற்றம் என்பது மனித மற்றும் கலாச்சார உருவாக்கத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும்: திருத்தந்தை

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

அறிவு என்பது வெறும் அறிவுசார் முயற்சியால் மட்டும் பெறப்படுவதில்லை, மாறாக அது கற்றல் மீதான ஆர்வம் மற்றும் ஆழமான மனிதனின் வேட்கையிலிருந்து பிறக்கிறது என்றும் இது அறிவைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க உதவுகிறது மற்றும் வாழ்க்கையை வழிநடத்தும் ஞானத்தை ஊக்குவிக்கிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு  102-வது கத்தோலிக்கப் பல்கலைக்கழக தினத்தை முன்னிட்டு 'அறிவின் அனுபவம்' என்ற தலைப்பில் திரு இருதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியொன்றில், திருத்தந்தை அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தை (1 கொரிந்தியர் 13:2) மேற்கோள் காட்டி, அன்பு இல்லாத அறிவு வெறுமையானது என்று அவர் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, உண்மையான கற்றலின் ஆழமான புரிதலைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அன்பில் வேரூன்றிய அறிவு என்பது உரையாடல், பல்துறை அறிவுப்பகிர்வு மற்றும் எதனையும் எதிர்கொள்ளும் பண்பாடு ஆகியவற்றை வளர்க்கிறது; இது பொது நலனுக்குப் பங்களிப்பதோடு, இலாபம் அல்லது அதிகாரத்தால் மட்டுமே இயக்கப்படும் அமைப்புகளை எதிர்க்கிறது" என்றும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்தில், இளைஞர்கள் நற்பண்புகள் சார்ந்த பொறுப்புணர்வையும், எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் திறனாய்வுச் சிந்தனையையும் வளர்த்துக்கொள்வது அவசியம் என்று திருத்தந்தை தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் அதன் பணிக்கு உண்மையாக இருந்து, அறிவின் அர்த்தமுள்ள அனுபவத்தை வழங்க அழைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ள திருத்தந்தை, தனது அன்பை வெளிப்படுத்துவதோடு, தேவையுள்ள தகுதியான மாணவர்களுக்குத் தனது ஆதரவை வழங்குவதாகக் கூறி தனது திருத் தூது ஆசீரையும் வழங்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஏப்ரல் 2026, 13:22