திருத்தந்தையின் உலகளாவிய செப வலையமைப்பின் புதிய பொது விதிமுறைகள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்பு, தனது பணி, அடையாளம் மற்றும் கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மார்ச் 19, வியாழக்கிழமை, புனித வளனார் பெருவிழாவன்று வெளியிடப்பட்ட இந்தப் புதிய பொது விதிமுறைகள், இவ்வலையமைப்பை ஒரு பாரம்பரிய திருஅவை இயக்கமாக அல்லாமல், திருத்தந்தையின் நேரடி சேவைக்கான ஓர் உலகளாவிய ஆன்மி முன்னெடுப்பாக அதன் பங்கை வலியுறுத்துகின்றன.
இந்த வலையமைப்பின் அறிக்கையின்படி, திருத்தந்தையின் மாதாந்திர இறைவேண்டல் கருத்துக்களின் வழிகாட்டுதலின்படி, செபம், உருவாக்கம் மற்றும் சேவை ஆகியவற்றின் மூலம் கிறிஸ்தவர்களை அணிதிரட்டுவதற்கான இவ்வமைப்பின் நோக்கத்தை இந்த விதிமுறைகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
மேலும் இந்தப் புதிய பொது விதிமுறைகள், சிறார்கள் மற்றும் வலுக்குறைந்த வயதுவந்தோருக்கான நிர்வாகக் கட்டமைப்புகள், பங்கேற்பு மாதிரிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கோடிட்டுக் காட்டுகின்றன.
கடந்த 2024-ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களுடன் இணைந்த இந்தப் புதிய விதிமுறைகள், 2028-ஆம் ஆண்டுக்குத் திட்டமிடப்பட்ட மறுஆய்வுக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்றும் அவ்வலையமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்பு உரோமையில் உள்ள வத்திக்கான் நிறுவனம் மூலம் செயல்பட்டு, 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஏறத்தாழ 2 கோடியே 20 இலட்சம் உறுப்பினர்களை ஒன்றிணைக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்