நூல் வெளியீட்டு விழாவில் கர்தினால் பியெத்ரோ பரோலின் நூல் வெளியீட்டு விழாவில் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

மோதல்களைத் தவிர்க்க அமெரிக்கா & இஸ்ரேலுக்கு திருப்பீடம் அழைப்பு!

"நான் நேரடியாக அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசினால், மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடியுங்கள், ஏனெனில் மோதல் அடுத்த கட்டத்திற்கு தீவிரமடையும் ஆபத்து மிக அருகில் உள்ளது" என்றும், "லெபனோனை அதன் போக்கில் விட்டுவிடுங்கள் என்று கூறுவேன்" எனவும் தெரிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

தற்போது மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்கள் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

மார்ச் 19, வியாழனன்று, உரோமையில் உள்ள இத்தாலிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவிற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், "நான் நேரடியாக அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசினால், இதை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடியுங்கள், ஏனெனில் மோதல் அடுத்த கட்டத்திற்குத் தீவிரமடையும் ஆபத்து மிக அருகில் உள்ளது" என்றும், "லெபனோனை அதன் போக்கில் விட்டுவிடுங்கள் என்று  கூறுவேன்" எனவும் தெரிவித்தார்.

மேலும் "இந்தச் செய்தி இஸ்ரேலுக்கும் பொருந்தும்" என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், தூதரக உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தை ஆகிய அமைதி வழிகளின் மூலம் பதற்றங்களைத் தணிக்குமாறு அந்நாட்டுத் தலைவர்களை கேட்டுக்கொண்டார்.

Cantagalli பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதும், வத்திக்கான் பத்திரிகையாளர் Ignazio Ingrao மற்றும் அகுஸ்தினார் சபையின் அருள்பணியாளர் Giuseppe Pagano ஆகியோரால் எழுதப்பட்டதுமான 'திருத்தந்தை பதினான்காம் லியோ : நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்? நான் புனித அகுஸ்தினாரின் மகன்'  என்ற நூல் வெளியீட்டு விழாவின் போது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தையான பதினான்காம் லியோ அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்துத் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட கர்தினால் பரோலின் அவர்கள், "அவரது ஒத்துழைப்பு மிகவும் எளிதானது" என்றும், "அவரிடையே சிறந்த உரையாடல் மற்றும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் நிலவுகிறது" என்றும் எடுத்துக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 மார்ச் 2026, 13:53