இளைஞர்களில் முதலீடு செய்ய கர்தினால் பரோலின் அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அமைதியின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இளைஞர்களில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கல்வி, வேலைகள் மற்றும் வாய்ப்புகள் இல்லாமல் அவர்கள் தீவிரவாதம், போர் மற்றும் சமூகத் தனிமைப்படுத்தலுக்கு 'இரையாக' மாறும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார்.
மார்ச் 10, செவ்வாயன்று, உரோமை அருகே உள்ள சாக்ரோஃபானோவில் நடைபெற்ற விருந்தோம்பல் கத்தேட்ரா கலாச்சார மன்றத்தின் நான்காவது அமர்வில் உரையாற்றியபோது இவ்வாறு கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், ஆயுத மோதல்கள், இடம்பெயர்வு அழுத்தங்கள் மற்றும் குறைந்து வரும் பிறப்பு விகிதங்கள் உள்ளிட்ட இன்று இளைஞர்கள் எதிர்கொள்ளும் பல சவால்கள் குறித்து எடுத்துரைத்தார்.
"உக்ரைனில் இடம்பெற்று வரும் மோதல்கள் போன்ற போர்களில் பல இளைஞர்கள் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" என்றும், "வாழ்வதற்கு வாய்ப்புகள் இல்லாததால் மற்றவர்கள் தீவிரவாதக் குழுக்களுக்குப் பலியாகின்றனர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
"எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் குறைந்த பிறப்பு விகிதங்களுக்கு பங்களிக்கிறது" என்று எடுத்துக்காட்டிய அவர், "குறிப்பாக மேற்கத்திய சமூகங்களில், குழந்தைகள் ஒரு கொடையாக இல்லமால், ஒரு சுமையாகவே பார்க்கப்படுவது அதிகரித்து வருகிறது" என்று கவலை தெரிவித்ததுடன், இந்தப் போக்கு எதிர்கால சந்ததியினரை சரி என ஏற்றுகொள்ளத் தூண்டும் என்று எச்சரித்தார்.
நிறுவனங்கள் மற்றும் முடிவெடுப்பதில் இளைஞர்கள் அதிக பங்காற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்த கர்தினால், உலகளாவியப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அவர்களிடமிருந்து வர முடியும் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
இளைஞர்களுக்குச் செவிசாய்த்து அவர்களுடன் பயணிக்க வேண்டியதன் அவசியத்தையும், அவர்களின் அடையாளம், மதிப்பீடுகள் மற்றும் நம்பிக்கையை வளர்க்க உதவுவதையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் பியெத்ரோ.
"நாம் ஓர் அமைதியான எதிர்காலத்தைப் பெற விரும்பினால், இளைஞர்களிடம் முதலீடு செய்து அவர்களை கதாநாயகர்களாக மாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டு தனது உரையை நிறைவு செய்தார் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்