தேடுதல்

உலக வானொலி நாள் உலக வானொலி நாள்  

செயற்கை நுண்ணறிவு சவால்களுக்கு மத்தியில் உலக வானொலி நாள்!

வேகமாக மாறிவரும் எண்மமுறை உலகில், வானொலி தன்னைத் தகவமைத்துக் கொண்டு தொடர்ந்தாலும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு அப்பால், இந்த ஊடகத்தின் நீடித்த நிலையான வலிமை என்பது அதன் தனித்துவமான மனிதத் தொடர்பில் தான் உள்ளது என்பதை உலக வானொலி தினம் நினைவூட்டுகிறது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பால் முன்னெடுக்கப்பட்டு , இந்த ஆண்டு 'குரல் மற்றும் செயற்கை நுண்ணறிவு' (Voice and AI) எனும் மையக்கருத்தில் கொண்டாடப்படும் உலக வானொலி நாள், வானொலி ஒளிபரப்பில் செயற்கை நுண்ணறிவின் வளர்ந்து வரும் தாக்கம் மற்றும் அந்த ஊடகத்தின் மையப்பகுதியாக விளங்கும் மனித பரிமாணத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், கடந்த இருபது ஆண்டுகளாக வானொலி எவ்வாறு வியக்கத்தக்க வகையில் பரிணமித்துள்ளது என்பது குறித்த சிந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

"தொடக்க காலத்தில் பாரம்பரிய ஒளிபரப்பு முறைகளுக்குள் (Traditional Broadcasting) மட்டுமே கட்டுப்பட்டிருந்த வானொலி, தற்போது ஒலியோடைகள் (Podcasts), இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடகப் பகிர்வுகள் என விரிவடைந்துள்ளது" என்றும், "இருப்பினும், இத்தகைய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு இடையிலும், மனிதக் குரலை மையமாகக் கொண்ட வானொலியின் அடிப்படை அடையாளம் மாறாமல் அப்படியே உள்ளது" என்றும் கூறியுள்ளது அவ்வமைப்பு.

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் 2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருளான, 'செயற்கை நுண்ணறிவு ஒரு கருவி; குரல் அல்ல' என்பது, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தொகுப்பாளர்கள், நகலெடுக்கப்பட்ட குரல்கள் (Cloned voices) மற்றும் படிமுறைத் தீர்வுகளால் (algorithm-selected news content) தேர்ந்தெடுக்கப்படும் செய்தி உள்ளடக்கங்கள் ஆகியவற்றின் அதிகரித்து வரும் பயன்பாடு குறித்த பெருகிவரும் கவலைகளை கோடிட்டுக் காட்டியுள்ளது.

"இத்தகைய தொழில்நுட்பங்கள் ஏற்கனவே பல வானொலி நிலையங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை முக்கியமான சிக்கல்களாக உருவெடுத்துள்ளன" என்றும்,  "ஒரு செய்தி அல்லது உள்ளடக்கம் மனித ஊடகவியலாளர்களால் வழங்கப்படாமல், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும்போது, அது குறித்து நேயர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும்" என்று வாதிட்டுள்ளது.

இந்த விவாதம் திருத்தந்தை தனது உலகத் தகவல் தொடர்பு நாள் செய்தியில், செயற்கை நுண்ணறிவின் போலித்தோற்றத்தின் வலிமை (Power of Simulation) ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் குறித்து எச்சரித்ததையும் அது வானொலித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையும் எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும், "செயற்கை நுண்ணறிவானது இணையாக ஒரு கற்பனை உலகத்தையே உருவாக்கக்கூடும், மனிதக் குரல்களையும் முகங்களையும் அப்படியே நகலெடுக்கக்கூடும்" என்றும், "இது உண்மையையும் பொய்மையையும் பிரித்தறிவதை மேன்மேலும் கடினமாக்குகிறது என்றும் திருத்தந்தை கூறியதை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆவணக் காப்பக மேலாண்மையை மேம்படுத்துதல் (Archive Management), நேயர்களின் விருப்பங்களை ஆய்வு செய்தல் (Audience Analysis) மற்றும் தயாரிப்புத் திறனை அதிகரித்தல் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவின் சாத்தியமான நன்மைகளை அங்கீகரிக்கும் அதேவேளையில், இந்தத் தொழில்நுட்பமானது மனித ஒளிபரப்பாளர்களுக்கு (Human Broadcasters) மாற்றாக அமையாமல், ஒரு துணைக் கருவியாக மட்டுமே செயல்பட வேண்டும் என்று வர்ணனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், "ஓர் உண்மையான மனிதக் குரல் வழியாக வெளிப்படும் உணர்வுப்பூர்வமான பிணைப்பு, நம்பகத்தன்மை மற்றும் நெருக்கம் ஆகியவற்றை எந்திரங்களால் ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது" என்று வாதிட்டுள்ளனர் வர்ணனையாளர்கள்.

வேகமாக மாறிவரும் எண்மமுறை உலகில், வானொலி தன்னைத் தகவமைத்துக் கொண்டு தொடர்ந்தாலும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு அப்பால், இந்த ஊடகத்தின் நீடித்த நிலையான வலிமை என்பது அதன் தனித்துவமான மனிதத் தொடர்பில் தான் உள்ளது என்பதை உலக வானொலி தினம் நினைவூட்டுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 பிப்ரவரி 2026, 13:27