தேடுதல்

வத்திக்கான் தவக்காலத் தியானம் வத்திக்கான் தவக்காலத் தியானம்  (ANSA)

வத்திக்கான் தவக்காலத் தியானம்: 'மறைக்கப்பட்ட மாட்சி’

"பல சீடர்கள் இயேசுவைக் கைவிட்டுவிட்டு ஓடிச்சென்ற போதிலும், தன்னையே வழங்கும் கிறிஸ்துவின் அன்பு (தற்கையளிப்பு செய்யும்) குறிப்பாக, துன்பத்தின் வழியாக உண்மையான மாட்சியைக் காட்டுகிறது" : ஆயர் வார்டன்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கானில் இடம்பெற்று வரும் தவக்கால ஆண்டுத் தியானத்தின் நான்காம் நாளில், ஆயர் எரிக் வார்டன் அவர்கள் ஏழாவது தியான உரையாக 'மறைக்கப்பட்ட மாட்சி' என்ற தலைப்பில் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

யோவான் நற்செய்தியை எடுத்துக்காட்டி, கல்வாரியில் கிறிஸ்து கைவிடப்பட்டதையும் சிலுவையில் அறையப்பட்டதையும் எடுத்துரைத்த ஆயர் வார்டன் அவர்கள், சிலுவையை 'ஆழ்ந்த மனித துரோகத்தின் தருணம்' என்றும், 'இறை மாட்சியின் உச்ச வெளிப்பாடு' என்றும் விவரித்தார்.

"பல சீடர்கள் அவரைக் கைவிட்டுவிட்டு ஓடிச்சென்ற போதிலும், தன்னையே வழங்கும் கிறிஸ்துவின் அன்பு (தற்கையளிப்பு செய்யும்) குறிப்பாக, துன்பத்தின் வழியாக உண்மையான மாட்சியைக் காட்டுகிறது" என்று விளக்கினார் ஆயர் வார்டன்.

புனித பெர்னார்ட் மற்றும் புனித அகுஸ்தினாரை மேற்கோள் காட்டி, "கிறிஸ்தவ நம்பிக்கை என்பது கடவுளுடனான எதிர்கால நேரடிச் சந்திப்பை சுட்டிக்காட்டுகிறது" என்றும், "அதேவேளையில், ஒவ்வொரு நபருக்குள்ளும் ஒரு "மறைக்கப்பட்ட மாட்சி" ஏற்கனவே வாழ்கிறது என்றும் வலியுறுத்தினார் ஆயர் வார்டன்.

மேலும் "பாவத்தாலும் பலவீனத்தாலும் அடிக்கடி மறைக்கப்பட்டாலும், இந்த மறைக்கப்பட்ட மாட்சியின் தெய்வீக உருவத்தை ஒருபோதும் அழிக்க முடியாது" என்று எடுத்துக்காட்டினார் ஆயர் வார்டன்.

இறுதியாக, "இந்த மறைக்கப்பட்ட மாட்சியை புனிதர்கள் மற்றும் அருளடையாளங்கள் வழியாக,  குறிப்பாக, திருநற்கருணை வழியாக, மக்கள் அழகு, நலமாக்குதல் மற்றும் உண்மையை அனுபவிக்கக்கூடிய வகையில் காட்ட திருஅவை உதவுகிறது" என்று கூறி தனது தியான உரையை நிறைவு செய்தார் ஆயர் வார்டன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 பிப்ரவரி 2026, 12:32