தேடுதல்

வத்திக்கான் தவக்காலத் தியானம் வத்திக்கான் தவக்காலத் தியானம்   (@Vatican Media)

வத்திக்கான் தவக்காலத் தியானம் : கடவுளின் தூதர்கள்!

தனது உரையில், "இடைக்கால இறையியலாளர் புனித பெர்னார்டின் சிந்தனைகளை மேற்கோள்காட்டி, இறைவனின் பராமரிப்பை நமக்குப் பெற்றுத் தரும் தூதுவர்களாகவும், பிறரன்பிற்கு முன்மாதிரிகளாகவும் வானதூதர்கள் விளங்குகின்றனர்" என்று சுட்டிக்காட்டினார் ஆயர் வார்டன்

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

"வானதூதர்கள் என்பவர்கள் மனிதர்களின் தற்காலிக விருப்பங்களை நிறைவேற்றுபவர்கள் அல்ல; மாறாக, அவர்கள் 'அறிவூட்டுபவர்களாக, பாதுகாப்பவர்களாக, வழிநடத்துபவர்களாக மற்றும் ஆள்பவர்களாக' விளங்கும் புனிதத்தின் காவலர்கள் என்று கூறினார் ஆயர் எரிக் வார்டன்.

வத்திக்கானில் இடம்பெற்று வரும் தவக்கால ஆண்டுத் தியானத்தின் ஐந்தாம் நாளில் "கடவுளின் தூதர்கள்" (God’s Angels) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தனது எட்டாவது தியான உரையை வழங்கியபோது இவ்வாறு கூறினார் ஆயர் வார்டன்.

"இயேசு கிறிஸ்து பாலைவனத்தில் எதிர்கொண்ட சோதனைகள் குறித்த நற்செய்திப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு, தியான உரையை வழங்கிய ஆயர் வார்டன் அவர்கள், இயேசுவைச் சோதிப்பதற்காகச் சாத்தான் திருப்பாடல் 90-ஐ தவறாகப் பயன்படுத்தியதை சுட்டிக்காட்டினார்.

"இறைவனின் அழைப்பு ஒருபோதும் ஆபத்தானது அல்ல, அது முழுமையான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது" என்று வலியுறுத்திய ஆயர் வார்டன் அவர்கள், "'உன்னைக் கீழே தள்ளிக் கொள்' என்பது சாத்தானின் கூற்று, ஆனால் 'என் கைகளில் விழு' என்பதே இறைவனின் அழைப்பு" என்று விளக்கமளித்தார்.

இடைக்கால இறையியலாளர் புனித பெர்னார்டின் சிந்தனைகளை மேற்கோள்காட்டி, இறைவனின் பராமரிப்பை நமக்குப் பெற்றுத் தரும் தூதுவர்களாகவும், பிறரன்பிற்கு முன்மாதிரிகளாகவும் வானதூதர்கள் விளங்குவதை சுட்டிக்காட்டிய  ஆயர் வார்டன் அவர்கள், தூதர்களின் இரக்கத்தையும், இறை உண்மையை நோக்கிய அவர்களின் உயர்ந்த ஏக்கத்தையும் பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.

துறவு வாழ்வை அதன் புகழ்ச்சி மற்றும் பணிக்காக 'வானதூதர்களுக்குரியது' என்று விவரித்த ஆயர் வார்டன் அவர்கள், திருஅவையின் வழிபாட்டு முறைகளில் குறிப்பாக, திருப்பலியில் விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் இடையிலான 'துடிப்புமிக்க ஓர் இணைப்புச் சங்கிலியாக' (Pulsating chain of mediation) வானதூதர்கள் அழைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், 19-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இறையியலாளர் ஜான் ஹென்றி நியூமனின் கருத்துக்களை  மேற்கோள்காட்டிய ஆயர் வார்டன் அவர்கள், அருள்பணியாளர்களும், ஆசிரியர்களும், மக்களின் மனங்களை அறிவுறுத்தி ஆன்மாக்களை வழிநடத்துவதில் ஒரு வானதூதருக்குரிய பணியைக் கொண்டிருக்கிறார்கள் என்ற நியூமனின் பார்வையை எடுத்துக்காட்டினார் .

"எண்மமுறை ஊடகங்கள் கல்வியை வடிவமைக்கும் இன்றைய காலத்தில், இந்த இலட்சியம் மிகவும் அவசியமானது" என்று குறிப்பிட்ட ஆயர் வார்டன் அவர்கள், "இளைய தலைமுறையினருக்கு வெறும் அறிவை  மட்டும் தராமல், ஞானத்தையும் சேர்த்து வழங்கக்கூடிய நம்பிக்கைக்குரிய வழிகாட்டிகள் இப்போதும் தேவைப்படுகிறார்கள்" என்று வலியுறுத்தினார்.

வானதூதர்களின் பிறரன்புச் செயலைக் குறித்துத் தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட ஆயர் வார்டன் அவர்கள், "விசுவாசிகள் தங்களின் மரணத் தருவாயில் இருக்கும்போது, வானதூதர்கள் அவர்களுடன் உடனிருக்கிறார்கள்" என்றும், "அந்தத் தருணத்தில், அனைத்து வெற்றுப் பேச்சலங்காரங்களும் அப்பாற்பட்டு, இரக்கத்தோடு இணைந்த உண்மையானது மட்டுமே நிலைத்து நிற்கும்" என்றும் கூறி தனது தியான உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 பிப்ரவரி 2026, 12:52