தவக்காலத் தியானம்: "நம்பிக்கையின் தூதுவர்களாக இருக்க அழைப்பு"
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
வத்திக்கானில் இடம்பெற்ற தவக்கால ஆண்டுத் தியானத்தின் இறுதி நாளில் பதற்றம், பிரிவு மற்றும் ஆன்மிகப் பசி ஆகியவற்றால் சூழப்பட்ட இவ்வுலகில், 'நம்பிக்கையைப் பறைசாற்றுவதற்கான' கிறிஸ்தவ அழைப்பைக் குறித்த தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் ஆயர் எரிக் வார்டன்.
ஆறாம் நாளிற்கான தனது தியான உரையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் பாரம்பரியத்தை முன்னிறுத்தி தனது சிந்தனைகளையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டார் ஆயர் வார்டன்.
1962-ஆம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடி உட்பட உலகளாவியப் பதற்றங்களுக்கு மத்தியில், திருத்தந்தை இருபத்தி மூன்றாம் யோவானால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் பொதுச் சங்கத்தின் பின்னணியை சுட்டிக்காட்டிய ஆயர் வார்டன் அவர்கள், திருஅவையின் மறைப் படிப்பினை மரபை (Doctrinal heritage) விட்டுக் கொடுக்காமல், மனித குலத்தின் ஆழமான கேள்விகளுக்குப் பதிலாகக் கிறிஸ்துவை அறிவிப்பதையே இந்தப் பொதுச் சங்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது என்பதை எடுத்துக்காட்டினார்.
"உண்மையான கிறிஸ்தவ நம்பிக்கை என்பது வெறும் மேலோட்டமான நலம்நோக்கு மனப்பாங்கு (Optimism) அல்லது வெறும் ஆசை கலந்த எண்ணமோ அல்ல" என்று கூறிய ஆயர் வார்டன் அவர்கள், "மக்கள் செல்வாக்கிற்காகப் பேசுபவர்கள் (Demagogues) விரைவான தீர்வுகளைத் தருவதாக வாக்களிக்கிறார்கள்" என்றும், "ஆனால் கிறிஸ்து துன்பங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் பிரிவினைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார். இருப்பினும், "என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது" (காண்க யோவா 15:5) என்ற இறைவார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, புதுப்பித்தலுக்காக உழைக்க கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள்" என்றும் எடுத்துக்காட்டினார்.
மேலும், சமகால கலாச்சாரத்தைக் குறிப்பிட்ட ஆயர் வார்டன் அவர்கள், இன்றைய இளைஞர்களிடையே காணப்படும் விரக்தியின் வெளிப்பாடுகளைச் சுட்டிக்காட்டியதுடன், குறிப்பாக, அமெரிக்கப் பாடகி கிரேசி ஆப்ராம்ஸின் (Gracie Abrams) வரிகளை மேற்கோள்காட்டி, "அவரின் 'கேம்டன்' (Camden) என்ற பாடல், இந்தத் தலைமுறையினரின் மனரீதியான பலவீனத்தையும் உடையக்கூடிய தன்மையையும் (fragility) படம்பிடித்துக் காட்டுகிறது" என்றும், "இத்தகைய அனுபவங்கள், நீடித்திருக்கக்கூடிய ஒரு நம்பிக்கைக்காக (enduring hope) மக்கள் கொண்டுள்ள ஆழமான பசியையே வெளிப்படுத்துகின்றன" என்றும் கூறினார்.
மேலும் "இந்த நம்பிக்கையின் மையப்புள்ளியாக திருச்சிலுவை நிற்கிறது" என்று குறிப்பிட்ட ஆயர் வார்டன் அவர்கள், "தொடக்கக் கால கிறிஸ்தவக் கலையில் சிலுவையைச் சித்தரிப்பதில் ஒருவித எச்சரிக்கை உணர்வு இருந்தது" என்றும் ஆனால், கால்செடோன் திருச்சங்கம் (Council of Chalcedon) வழங்கிய தெளிவுபடுத்தலுக்குப் பிறகு, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் திருவுருவம் கிறிஸ்தவ விசுவாசத்திற்கும் கலாச்சாரத்திற்கும் மையமான ஒன்றாக மாறியது" என்றும் சுட்டிக்காட்டினார்.
கிறிஸ்துவின் காயமடைந்த, அதேவேளை உயிர்த்தெழுந்த உடலில், துன்பம் என்பது மறுக்கப்படவும் இல்லை அல்லது வெறும் புகழ்ச்சியாகக் கருதப்படவும் இல்லை; மாறாக, அது உருமாற்றம் (Transformed) செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார் ஆயர் வார்டன்.
வத்திக்கானில் இடம்பெற்ற இந்தத் தவக்கால ஆண்டுத் தியானத்தில், திருத்தந்தை பதினான்காம் லியோ, உரோமையில் வசிக்கும் கர்தினால்கள் மற்றும் பல்வேறு திருப்பீடத் துறைகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்