வத்திக்கான் தவக்கால ஆண்டுத் தியானம் நிறைவு பெற்றது
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிப்ரவரி 27, வெள்ளிக்கிழமையன்று திருப்புகழ் மாலை வழிபாட்டுடன் வத்திக்கானில் இடம்பெற்று வந்த ஆறு நாள்களுக்கான தவக்கால ஆண்டுத் தியானம் நிறைவடைந்தது.
இறுதியில், கிறிஸ்துவின் சோதனைகள், புனித பெர்னார்டின் சான்று வாழ்வு மற்றும் திருஅவை வாழ்க்கையின் முக்கிய கருப்பொருள்கள் பற்றிய சிந்தனைகள் வழியாக இந்தத் தியானத்தை சிறப்பாக வழிநடத்திய ஆயர் எரிக் வார்டன் மற்றும் பங்குபெற்ற பல்வேறு திருப்பீடத் துறைகளின் அதிகாரிகள் அனைவருக்கும் தனது மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்தத் தவக்கால ஆண்டுத் தியானத்தின் ஆன்மிகப் பயணத்தை "ஆழமான மற்றும் முக்கியமான ஆன்மிக அனுபவம்" என்று அவர் விவரித்தார் திருத்தந்தை.
திருத்தந்தை மூன்றாம் யூஜின் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து புனித பெர்னார்ட் கூறிய ஒரு குறிப்பிடத்தக்க கருத்தை நினைவு கூர்ந்த திருத்தந்தை, சில தருணங்கள் எவ்வாறு தன்னை ஆழ்ந்த சுயபரிசோதனைக்கு இட்டுச் சென்றன என்பதையும் பகிர்ந்து கொண்டார்.
பிலிபியருக்கு எழுதிய திருமுகத்தில், "நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே" (காண்க பிலி 1:21) என்று புனித பவுலடியார் கூறும் வார்த்தைகளை, நம்பிக்கை, பணி மற்றும் நற்செய்திக்கு நம்பகத்தன்மையுடன் வாழ்வது ஆகியவற்றின் வெளிப்பாடாக எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
சுதந்திரம், உண்மை மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கை போன்ற கருப்பொருள்களை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்துவை நம்பிக்கையின் உண்மையான ஆதாரமாக விவரித்தார்.
மேலும் "கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள்" (காண்க பிலி 1:27) என்ற புனித பவுலின் அழைப்பை மேற்கோள் காட்டி, இதை இறைவேண்டல் நாள்களிலிருந்து வெளிப்படும் மையச் செய்தியாக சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இறைவேண்டலை உயர்த்துவதில் இசையின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டிய திருத்தந்தை, திருப்புகழ் மாலை வழிபாட்டுக் குழுவினருக்கும், பாடகர் குழுவினருக்கும் அவர்களின் பங்களிப்பிற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இறுதியாக, இத்தவக்கால ஆண்டுத் பங்குபெற்ற அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி தனது பகிர்வையும் நன்றியுரையையும் நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்