தவக்காலத் தியானம் : 'பெர்னார்ட் ஒரு நடைமுறை மெய்ம்மையாளர்'
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வத்திக்கானில் இடம்பெற்று வரும் தவக்கால ஆண்டுத் தியானத்தின் ஐந்தாம் நாளில், ஆயர் எரிக் வார்டன் அவர்கள் ஒன்பதாவது தியான உரையாக 'பெர்னார்ட் ஒரு நடைமுறை மெய்ம்மையாளர்' என்ற தலைப்பில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.
தனது உரையில், கிளேர்வாக்ஸின் பெர்னார்ட் எவ்வாறு ஆன்மிக ரீதியில் வளர்ந்தார் என்பதை விளக்கிய ஆயர் வார்டன் அவர்கள், 12-ஆம் நூற்றாண்டின் சிஸ்டெர்சியன் சீர்திருத்தவாதியான இவர் எவ்வாறு ஒரு தீவிர இலட்சியவாதியிலிருந்து ஆழமான மற்றும் சிந்தனைமிக்க நடைமுறை மெய்ம்மையாளராக (எதார்த்தவாதி) மாறினார் என்பதை எடுத்துக்காட்டினார்.
மேலும் "உயர்ந்த ஆன்மிக இலட்சியங்களுக்கும் பொது வாழ்க்கையின் நடைமுறை எதார்த்தங்களுக்கும் இடையிலான பதற்றத்தால் சிஸ்டெர்சியன் அமைப்பு வடிவமைக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுக் காட்டினார் ஆயர் வார்டன்.
"பெர்னார்ட் கண்டிப்பானவராகவும் சீர்திருத்தத்தில் உறுதியாகவும் இருப்பதற்காக அறியப்பட்டாலும், காலப்போக்கில், அனுபவம் அவரை மென்மையாக்கி, மேலும் இரக்கமுள்ளவராக மாற்றியது" என்று கூறினார் ஆயர் வார்டன்.
ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு மனோ பகுப்பாய்வாளர் மற்றும் உளவியலாளர் ஜாக் லக்கனால் உருவாக்கப்பட்ட "உண்மையானது" (the real) என்ற கருத்தைப் பற்றி குறிப்பிட்ட ஆயர் வார்டன் அவர்கள், "அரசியல் மற்றும் திருஅவை மோதல்களில் பெர்னார்டின் ஈடுபாடு மனித வாழ்க்கையின் ஆழமான எதார்த்தங்களை எதிர்கொள்ள அவரை கட்டாயப்படுத்தியது" என்று அவர் விளக்கினார்.
"பெர்னார்ட் இறுதியில் மனித போராட்டங்களுக்கு அடியில் ஓர் உலகளாவிய 'இரக்கத்திற்கான கூக்குரலை' உணர்ந்தார்" என்றும், "இது இயேசுவின் தூய்மைமிகு நாமத்தின் மீதான அவரது பக்தியின் மூலம் ஆழமடைந்தது" என்றும் சுட்டிக்காட்டினார் ஆயர் வார்டன்.
"கிறிஸ்துவை மையமாகக் கொண்ட பெர்னார்டின் இறையியல், பின்னர் மார்ட்டின் லூதர் மற்றும் ஜான் வெஸ்லி உள்ளிட்ட கத்தோலிக்க மதத்திற்கு அப்பாற்பட்ட கிறிஸ்தவச் சிந்தனையாளர்களை ஊக்கப்படுத்தியது" என்று குறிப்பிட்டார் ஆயர் வார்டன்.
"பெர்னார்டின் எதார்த்தமான கண்ணோட்டம் வெறும் செயலற்ற ஏற்பு மட்டுமல்ல, கிறிஸ்துவின் அன்பால் வழிநடத்தப்பட்ட ஆன்மிக நுண்ணறிவு" என்றும், "இது அவரை திருஅவையின் மறைவல்லுநராகவும் நீடித்த ஆன்மிக முன்மாதிரியாகவும் மாற்றிய மாற்றம்" என்றும் கூறி தனது ஒன்பதாவது தியான உரையை நிறைவு செய்தார் ஆயர் வார்டன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்