தேடுதல்

ஆயுத் தாக்குதல் ஆயுத் தாக்குதல்  

உலகளாவிய ஆயுதக் குறைப்பிற்குத் திருப்பீடம் அழைப்பு!

"தன்னியக்கக் கொடிய ஆயுதங்கள் அமைப்பு முறைகளுக்கு ஒரு தற்காலிகத் தடை (Moratorium) விதிக்கப்பட வேண்டும் என்று திருப்பீடம் வேண்டுகோள் விடுப்பதாகவும், பலப்பிரயோகம் செய்யப்படும் அனைத்துச் சூழல்களிலும் அதன் மீதான கட்டுப்பாடு மனிதர்களிடமே இருக்க வேண்டும்" என்று வலியுறுத்துவதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார் பேரருள்திரு டேனியல் பாச்சோ.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஜெனிவாவில் இடம்பெற்ற ஆயுதக் குறைப்பு மாநாட்டில், விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை இராணுவமயமாக்கப்படுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்த திருப்பீடம் உலகளாவிய ஆயுதக் குறைப்புக்கான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தியது.

ஐக்கிய நாடுகள் அவையின் 2026-ஆம் ஆண்டு கூட்டத்தொடரில் உரையாற்றிய திருப்பீடப் பன்முகத்துறைக்கான துணைச் செயலாளர் பேரருள்திரு டேனியல் பாச்சோ அவர்கள், மனிதகுலம் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்பதாகவும், போர் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் திருத்தந்தை  எச்சரிக்கை விடுத்ததையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பேச்சுவார்த்தைகளை விட்டுவிட்டு, அதிகாரத்தைப் பயன்படுத்தி காரியம் சாதிக்கும் முறை அதிகரித்து வருவதாகவும், இது உலக நாடுகள் இணைந்து ஆயுதங்களைக் குறைப்பதைத் தடுப்பதாகவும் சுட்டிக்காட்டினார் பாச்சோ

தொடர்ந்து ஆயுதக் குறைப்பை ஓர் 'அறநெறிக் கடமை' (Moral Imperative) என்று குறிப்பிட்ட பேரருள்திரு பச்சோ அவர்கள், அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றைக் கொண்டு அச்சுறுத்தும் தற்காப்புக் கொள்கைகளுக்கு திருப்பீடத்தின் எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேலும் "அணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகள், தங்கள் ஆயுதக் கிடங்குகளைக் குறைப்பதற்கும், இறுதியில் அவற்றை முழுமையாக ஒழிப்பதற்கும் நல்லெண்ணத்துடன் கூடிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார் பேரருள்திரு பாச்சோ.

"வல்லரசு நாடுகளுக்கு இடையேயான போட்டித்தளமாக விண்வெளி மாறிவருவதாக எச்சரித்த பேரருள்திரு பாச்சோ அவர்கள், "விண்வெளி ஒப்பந்தத்திற்கு (Outer Space Treaty) இணங்க, அது எப்போதும் அமைதியான மண்டலமாகவே இருக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசிய பேரருள்திரு பாச்சோ அவர்கள், 'தன்னியக்கக் கொடிய ஆயுதங்கள் அமைப்புமுறை' (Lethal Autonomous Weapons Systems) பற்றிய தனது கவலைகளை எழுப்பிய அதேவேளை,  முடிவெடுக்கும் செயல்முறையிலிருந்து மனிதர்களை நீக்குவது போரைத் தொடங்குவதை எளிதாக்கும் என்பதால், இவ்வமைப்பு முறை மிகவும் ஆபத்தானவை என்று குறிப்பிட்டார்.

ஆகவே, "இத்தகைய அமைப்பு முறைகளுக்கு ஒரு தற்காலிகத் தடை (Moratorium) விதிக்கப்பட வேண்டும் என்று திருப்பீடம் வேண்டுகோள் விடுப்பதாகவும், பலப்பிரயோகம் செய்யப்படும் அனைத்துச் சூழல்களிலும் அதன் மீதான கட்டுப்பாடு மனிதர்களிடமே இருக்க வேண்டும்" என்று வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார் பாச்சோ.

இறுதியாக, பொது நலனைக் கருத்தில் கொண்டு, நாடுகள் உறுதியான மற்றும் நிலையான ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி  தனது உரையை நிறைவு செய்தார் பேரருள்திரு டேனியல் பாச்சோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 பிப்ரவரி 2026, 13:05