தேடுதல்

பேராயர் கபிரியேலே காச்சா பேராயர் கபிரியேலே காச்சா 

பொது நலனுக்காக சமூக நீதியை ஊக்குவிக்குமாறு திருப்பீடம் வலியுறுத்தல்!

பிப்ரவரி 4, புதனன்று, நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 64-வது அமர்வில், சமூக நீதி மற்றும் சமூக மேம்பாட்டிற்கான திருப்பீடத்தின் உறுதிப்பாட்டையும், ஒவ்வொரு நபரின் பொது நன்மை மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு அதன் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தினார் பேராயர் கபிரியேலே காச்சா.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சமூக மேம்பாட்டுக் கொள்கைகளின் மையத்தில் மனித மாண்பை நிலைநிறுத்துமாறு நாடுகளின் அரசுகளுக்கு அழைப்புவிடுத்துள்ள திருப்பீடம், "சமூக நீதி என்பது பொது நன்மையை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியது.

பிப்ரவரி 4, புதனன்று, நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 64-வது அமர்வில் பேசிய ஐக்கிய நாடுகள் அவைக்கானத் திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா அவர்கள், "தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகக் குழுக்கள் தங்கள் முழு வளர்ச்சியை அடைய உதவுவதற்கு மாநிலங்களுக்கு பொறுப்பு உள்ளது" என்று கூறினார்

"பொது நன்மைக்கான பொறுப்பை தனிநபர்கள் பகிர்ந்து கொண்டாலும், அதை அவர்களால் தனியாக அடைய முடியாது" என்று கோடிட்டுக் காட்டிய பேராயர் காச்சா அவர்கள், "அரசியல் நிறுவனங்கள், சமூக ஒன்றிப்பு மற்றும் ஒற்றுமையை உறுதி செய்யும் அதேவேளையில், கலாச்சார, தார்மீக மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்குத் தேவையான பொருள் வளங்களையும் சுதந்திரங்களையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குடும்பத்தை ஆதரிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த பேராயர் காச்சா அவர்கள், அதை சமூகத்தின் அடிப்படை அலகு என்றும், கூட்டொருமைப்பாடு, உள்ளடக்கம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு போன்ற மதிப்பீடுகளின் மூலமாகவும் விவரித்தார்.

"துணை நிறுவனக் கொள்கையால் வழிநடத்தப்படும், அரசுகளுக்குள்ளும், அவற்றுக்கு இடையிலும், நம்பிக்கை சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

வறுமையை நிவர்த்தி செய்வதில், அதன் கட்டமைப்பு காரணங்களைச் சமாளிப்பது குறித்த திருத்தந்தையின் அழைப்பை நிர்ணைவுகூர்ந்த பேராயர், "வறுமை, வேலையின்மை மற்றும் சமூக விலக்கு ஆகியவை பொருள் சார்ந்தவற்றுடன் ஆன்மிக மற்றும் தார்மீக விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன" என்று குறிப்பிட்டார்.

சமூக நீதி மற்றும் சமூக மேம்பாட்டிற்கான திருப்பீடத்தின் உறுதிப்பாட்டையும், ஒவ்வொரு நபரின் பொது நன்மை மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு அதன் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார் பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 பிப்ரவரி 2026, 12:29