வத்திக்கானில் இடம்பெற்று வரும் தவக்கால ஆண்டுத் தியானம் வத்திக்கானில் இடம்பெற்று வரும் தவக்கால ஆண்டுத் தியானம்  (ANSA)

வத்திக்கான் தவக்காலத் தியானம் : ஆயிரக்கணக்கானோரின் வீழ்ச்சி!

"ஆன்மிக முதிர்ச்சி என்பது தனிப்பட்ட நடத்தை மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நேர்மையைக் கொண்டிருக்க வேண்டும். ஆன்மிக வாழ்க்கைக்கும் சாதாரண வாழ்க்கைக்கும் இடையே எந்தப் பிரிவினையும் இருக்கக் கூடாது" : ஆயர் எரிக் வார்டன்

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

"உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது" என்ற திருப்பாடல் 91-ஐ மேற்கோள் காட்டி திருஅவைக்குள் நிகழும் தார்மீக மற்றும் ஆன்மீக வீழ்ச்சியின் எதார்த்தத்தைப் தனது தியானச் சிந்தனைகளாகப் பகிர்ந்து கொண்டார் ஆயர் வார்டன்.

வத்திக்கானில் இடம்பெற்று வரும் தவக்கால ஆண்டுத் தியானத்தின் நான்காம் நாளில் "ஆயிரக்கணக்கானோரின் வீழ்ச்சி" (The Fall of Thousands) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு தனது ஆறாவது தியான உரையை வழங்கியபோது இவ்வாறு கூறினார் ஆயர் வார்டன்.

"சில தனிப்பட்ட வீழ்ச்சிகள் ஒருவரைத் தாழ்ச்சிக்கும் இறையருளுக்கும் இட்டுச் செல்லும் தருணங்களாக மாறக்கூடும்" என்று கூறிய ஆயர் வார்டன் அவர்கள், "குறிப்பாகத் திருஅவைக்குள்ளேயே நிலவும் முறைகேடுகளால் ஏற்படும் வீழ்ச்சிகள் பேரழிவைக் கொண்டு வரும்" என்று எச்சரித்தார்.

திருஅவை எதிர்கொள்ளும் மிகக் கடுமையான சவால்கள் மதச்சார்பற்ற எதிர்ப்புகளால் உருவானவை அல்ல, மாறாக அவை உட்புற ஊழல்களால், குறிப்பாகத் வன்முறை வழக்குகளால் ஏற்பட்டவை என்று கூறினார் ஆயர் வார்டன்.

"இத்தகைய காயங்களுக்கு நீதி, மனம்மாற்றம் மற்றும் நலம்பெற அவகாசம் ஆகியவை தேவைப்படுகின்றன" என்று சுட்டிக்காட்டிய ஆயர் வார்டன் அவர்கள், புனித பெர்னார்டின் சிந்தனைகளை மேற்கோள் காட்டி "உன்னதமான ஆன்மிக முயற்சிகளை மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் மிகக் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

மேலும், உலகை வெறும் 'கொடுமைக்காரர்கள்' மற்றும் 'பாதிக்கப்பட்டவர்கள்' என இரு துருவங்களாகப் பிரிக்கும் எளிமையான பார்வையை நிராகரித்த ஆயர் வார்டன் அவர்கள், ஒவ்வொரு மனிதரும் தன் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

"ஆன்மிக முதிர்ச்சி என்பது தனிப்பட்ட நடத்தை மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் உட்பட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நேர்மையைக் கொண்டிருக்க வேண்டும்" என்று கூறிய ஆயர் வார்டன் அவர்கள், "ஆன்மிக வாழ்க்கைக்கும் சாதாரண வாழ்க்கைக்கும் இடையே எந்தப் பிரிவினையும் இருக்கக் கூடாது" என்றும் எச்சரித்தார்.

மேலும் "ஆன்மிக வாழ்வு என்பது மனித இருப்பு அல்லது வாழ்க்கையின் எஞ்சிய பகுதிகளிலிருந்து தனித்து நிற்கும் ஒரு துணையங்கம் அல்ல; அது வாழ்வின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும்" என்று எடுத்துக்காட்டினார் ஆயர் வார்டன்.

"ஆன்மிகம் என்பது வாழ்வின் உயிர்நாடி" என்று குறிப்பிட்ட ஆயர் வார்டன் அவர்கள், "நமது உடல் சார்ந்த ஆசைகளும், ஆன்மிகத் தேடல்களும் சமநிலையில் இருக்க வேண்டும்" என்றும், "அவை இரண்டும் கிறிஸ்துவின் வழிநடத்துதலுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்" என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டு தனது நான்காம் நாள் தியான உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 பிப்ரவரி 2026, 11:26