தேடுதல்

யூபிலி ஆண்டில் உரோமைக்கு 3 கோடிக்கும் மேற்பட்ட திருப்பயணிகள் வருகை!

ஜனவரி 6, செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட்ட திருக்காட்சிப் பெருவிழாவன்று, புனித பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவை முறைப்படி மூடியவேளை, இந்தப் புள்ளிவிவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

யூபிலி ஆண்டில் உலகம் முழுவதும் 185 நாடுகளிலிருந்து ஏறத்தாழ 3 கோடியே 35 லட்சம் திருப்பயணிகள் உரோமை நகருக்கு வருகை புரிந்துள்ளனர் என்றும், இது தொடக்கத்தில் கணிக்கப்பட்ட 3 கோடியே 10 இலட்சம் என்ற எண்ணிக்கையை விட அதிகம் என்றும் கூறியுள்ளார் பேராயர் ரீனோ பிசிகெல்லா

ஜனவரி 5, திங்களன்று வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார் புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர் பேராயர் ரீனோ பிசிகெல்லா. 

யூபிலி என்பது வெறும் எண்களால் அளவிடப்பட வேண்டிய ஒன்றல்ல, அது ஆன்மிக அனுபவங்களால் அளவிடப்பட வேண்டியது என்பதை வலியுறுத்திய பேராயர், மக்கள் வெறும் சுற்றுலாப் பயணிகளாக வராமல், உண்மையான திருப்பயணிகளாக யூபிலி ஆண்டில் பங்கேற்றதை உறுதிப்படுத்தும் சில முக்கிய ஆன்மிக மாற்றங்களை சுட்டிக்காட்டினார்.

ஜனவரி 6, செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட்ட திருக்கட்சிப் பெருவிழாவன்று, புனித பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவை முறைப்படி மூடியவேளை, இந்தப் புள்ளிவிவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

யூபிலி ஆண்டில் உரோமைக்கு வந்தத் திருப்பயணிகளில் 62 விழுக்காட்டினர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் என்றும், இதில் இத்தாலி முதலிடத்தைப் பிடித்தது என்றும் அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஸ்பெயின், பிரேசில் மற்றும் போலந்து நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரு அவை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையே நிலவிய நெருக்கமான ஒத்துழைப்பின் காரணமாக இந்த யூபிலி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது என்றும், 7,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் முதலுதவிப் பணியாளர்களின் சேவையால் இது சாத்தியமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஜனவரி 2026, 15:00