ஆயுதங்களற்ற அமைதிக்குத் திருப்பீடம் அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆயுதங்களற்ற மற்றும் ஆயுதங்களைக் களைந்த அமைதிக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் அழைப்பை திருப்பீட மற்றும் தூதரக அதிகாரிகள் தங்கள் உரைகளில் எடுத்துக்காட்டினர்.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவைக்கான திருப்பீடத்தின் நிரந்தர தூதுக்குழு, அதன் 17-வது ஆண்டு பல்மத அமைதிக்கான பணிக் குறித்து நடத்திய கூட்டமொன்றில் திருத்தந்தையின் இந்தக் கருத்தை வெளிப்படுத்தினர்.
“உலகளாவிய வன்முறையை எதிர்ப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்” என்றும், வார்த்தைகளையோ அல்லது மதத்தையோ ஆயுதங்களாகத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்” என்று மக்களை வலியுறுத்துவதாகக் கூறினார் ஐ.நா. அமைப்புக்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான திருப்பீட பிரதிநிதி பேராயர் எத்தோரே பலஸ்த்ரேரோ.
“உண்மையான அமைதிக்கு நீதி மற்றும் மனித மாண்பிற்கான மரியாதை தேவை” என்று கூறிய, எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா அவர்கள், “திருத்தந்தை லியோ அவர்களின் செய்தி ஒரு சவாலான ஆனால் அதேவேளையில், நம்பிக்கையான பார்வை” என்று விவரித்தார்
இக்கூட்டத்தில் 300 தூதரக அதிகாரிகள், அரசுத் தூதர்கள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்து கொண்டு, திருத்தந்தையின் 2026-ஆம் ஆண்டுக்கான உலக அமைதி செய்தியில் கூறப்பட்டுள்ள "ஆயுதங்களற்ற மற்றும் ஆயுதங்களைக் களைந்த அமைதி" என்ற மையக்கருத்தை எடுத்துக்காட்டும் வகையில் உரையாற்றினர்.
அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை, உலகளவில் 130 செயலில் உள்ள ஆயுத மோதல்களை எடுத்துக்காட்டுகிறது மற்றும் வாழ்க்கையையும் அமைதிக்கான பாதைகளையும் பாதுகாப்பதில் மனிதாபிமான சட்டத்தின் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்