திருப்பலிக்குத் தலைமையேற்கும் கர்தினால் பியத்ரோ பரோலின் திருப்பலிக்குத் தலைமையேற்கும் கர்தினால் பியத்ரோ பரோலின்  (AFP or licensors)

அரேபிய அன்னை ஆலயம் திருத்தலப் பேராலயமாக உயர்வு!

"1948 -ஆம் ஆண்டு, குவைத்தின் எண்ணெய் வயல்களில் பணியாற்றுவதற்காக வந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள், பாலைவனத்தின் நடுவே தங்களின் வழிபாட்டிற்காக ஒரு சிறிய அறையை உருவாக்கினர். அரேபிய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அந்தச் சிறிய இடமே இன்று உலகப் புகழ்பெற்ற இன்று திருத்தலப் பேராலயமாக வளர்ந்து நிற்கிறது" : கர்தினால் பியெத்ரோ பரோலின்

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

"போர், வறுமை, இயற்கைச் சீற்றங்கள் அல்லது பிற இன்னல்களின் காரணமாக, பாதுகாப்பான இடத்தைத் தேடிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகும் உலகெங்கிலும் உள்ள பலரைப் பற்றி நமது எண்ணங்கள் இயல்பாகவே திரும்புகின்றன"என்று கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

ஜனவரி 16, வெள்ளியன்று, குவைத்தின் அஹ்மதியிலுள்ள அரேபிய அன்னை ஆலயத்தில் நிகழ்ந்த திருப்பலிக்குத் தலைமை தாங்கி சிறப்பித்த கர்தினால் பரோலின் அவர்கள், "வாழ்வின் சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும் குழந்தை இயேசுவை நம் உள்ளத்தின் ஆழத்தில் போற்றிப் பாதுகாக்கவும், அவர் மீதான நம்பிக்கையில் உறுதியாக இருக்கவும் அருள் நிறைந்த மரியாவே நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்" என்றும் கூறினார்.

சிறப்பாக, இந்த ஆலயம் அதிகாரப்பூர்வமாக திருத்தலப் பேராலயமாக உயர்த்தப்பட்டிருப்பது, அம்மாநிலத்தில் உள்ள கத்தோலிக்கச் சமூகத்தின் ஆழமான விசுவாசத்திற்கு ஒரு சான்றாகும்" என்று எடுத்துக் காட்டினார் கர்தினால் பரோலின்.

"இந்தப் பேராலயம் ஒரு புகலிடமாகவும், அமைதி தரும் இடமாகவும் இருக்கும்" என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், "விசுவாசிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் வழியாகவும், மற்றவர்களிடம் காட்டும் அன்பின் மூலமாகவும் கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ வேண்டும்" என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும், "வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் சங்கமிக்கும் இந்த நாட்டில், கத்தோலிக்கர்கள் அமைதியின் தூதுவர்களாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார் கர்தினால் பரோலின்.

"இந்த ஆலயம் திருத்தலப் பேராலயம் என்ற சிறப்பைப் பெறும்போது, அது அந்த உள்ளூர் தேவாலயத்திற்கும், உலகளாவியக் கத்தோலிக்கத் திருஅவையின் மையமான உரோமைக்கும் குறிப்பாக, புனித பேதுருவின் தலைமைப் பீடத்திற்கும் இடையிலான பிணைப்பை ஆழமாக்குகிறது" என்றும் எடுத்துக் கூறினார் கர்தினால் பரோலின்.

அரபு தீபகற்பத்திலேயே முதல் திருத்தலப் பேராலயம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இந்தப் பேராலயப் பெருவிழா நிகழ்வில், வளைகுடா நாடுகளின் தலத்திருஅவைத் தலைவர்கள், அந்நாட்டின் அரசு அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க விசுவாசிகள் கலந்து கொண்டனர்.

"1948 -ஆம் ஆண்டு, குவைத்தின் எண்ணெய் வயல்களில் பணியாற்றுவதற்காக வந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள், பாலைவனத்தின் நடுவே தங்களின் வழிபாட்டிற்காக ஒரு சிறிய அறையை உருவாக்கினர்" என்றும், "அரேபிய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அந்தச் சிறிய இடமே இன்று உலகப் புகழ்பெற்ற பேராலயமாக வளர்ந்து நிற்கிறது" என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார் கர்தினால் பரோலின்.

இறுதியாக, "அன்னை மரியாவின் இந்தத் திருவுருவம் உயர்தர லெபனோன் தேவதாரு மரத்தால் செதுக்கப்பட்டுள்ளது" என்று எடுத்துக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், "கத்தோலிக்கத் திருஅவையின் மரியன்னை ஆண்டின்போது, வத்திக்கானில் வைத்து திருத்தந்தை பண்னனிரெண்டாம் பயஸ் அவர்களால் இது தனிப்பட்ட விதத்தில் இது புனிதப்படுத்தப்பட்டது"  என்றும் எடுத்துக் கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 ஜனவரி 2026, 13:34