தேடுதல்

திருப்பலி நிறைவேற்றும் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பலி நிறைவேற்றும் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

திருஅவையின் நம்பகத்தன்மை என்பது சான்று பகிர்வதில் உள்ளது!

"எதிர்ப்பு மற்றும் வெளிப்படையான தோல்வி இருந்தபோதிலும், நற்செய்திப் பணியைத் தேர்ந்தெடுப்பதில் அன்ஸ்கரின் துணிவைக் கொண்டிருந்தார்" : கர்தினால் பியெத்ரோ பரோலின்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

"திருஅவையின் நம்பகத்தன்மை என்பது, அதிகாரத்தில் அல்ல, மாறாக, சான்று பகிர்வதில் உள்ளது!" என்று உறுதிப்படக் கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

டென்மார்க் புனித அன்ஸ்கரின் மறைப்பணியின் 12-வது நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜனவரி 25, ஞாயிறன்று, கோபன்ஹேகனின் பேராலயத்தில் நிகழ்ந்த  திருப்பலியின் போது இவ்வாறு தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

இந்தக் கொண்டாட்டங்களுக்கான திருத்தந்தையின் தூதராக சென்ற, கர்தினால் பரோலின் அவர்கள், "திருஅவையின் நம்பகத்தன்மை என்பது அதிகாரம், எண்ணிக்கை அல்லது வியூகங்களில் வேரூன்றி இருக்கவில்லை, மாறாக விடுதலை, நீதி மற்றும் இரக்கத்தின் செயல்கள் மூலம் விசுவாசத்தின் உயிருள்ள சான்றுபகர்தலில் உள்ளது" என்று வலியுறுத்திக் கூறினார்.

கிபி 9-ஆம் நூற்றாண்டில் வடக்கு ஐரோப்பாவில் தனது பணியைத் தொடங்கிய ஆசீர்வாதப்பர் (பெனடிக்டைன்) துறவு சபையைச் சேர்ந்த புனித அன்ஸ்கரின் பாரம்பரியத்தை  வெளிப்படுத்தும் வகையில், சுதந்திரம் மற்றும் மனித மாண்பிற்கான அவரின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

"டென்மார்க்கில் துறவியின் முதல் செயல் அடிமைகளை மீட்பதாகும்" என்று குறிப்பிட்ட கர்தினால், "புதிய வடிவிலான அடிமைத்தனம் மற்றும் விலக்குகளால் குறிக்கப்பட்ட உலகில் இன்றும் பொருத்தமான செயலாக இது இருக்கிறது" என்றும் எடுத்துக்காட்டினார்.

எசாயா நூலில் (52:7-10) இறைவார்த்தைகளை மேற்கோள் காட்டிய கர்தினால், "மீட்பு மற்றும் மாற்றத்தின் நற்செய்தியைக் கொண்டுவரும் திறனில்தான் திருத்தூதரின் உண்மையான மதிப்பு உள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.

எதிர்ப்பு மற்றும் வெளிப்படையான தோல்வி இருந்தபோதிலும், நற்செய்திப் பணியைத் தேர்ந்தெடுப்பதில் அன்ஸ்கரின் துணிவை அடிக்கோடிட்டுக் காட்டிய கர்தினால், "திருஅவை எண்ணிக்கையின் மூலம் அல்ல, மாறாக விசுவாசம் மற்றும் விடாமுயற்சியின் வாழ்க்கை மூலம் வளர்கிறது" என்று எடுத்துக்காட்டினார்.

"சவால்களை எதிர்கொள்ளும்போது புதுப்பிக்கப்பட்ட நற்செய்தி அறிவிப்பு வலிமையையும், நம்பிக்கையையும் அவசியம்" என்றும், "விசுவாசிகள் அன்ஸ்கரின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒவ்வொரு சூழ்நிலையிலும் கிறிஸ்துவுடன் பயணிக்க வேண்டும்" என்றும் கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் கர்தினால் பரோலின். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஜனவரி 2026, 12:44