இறைமக்களுடன் கர்தினால் பியத்ரோ பரோலின் இறைமக்களுடன் கர்தினால் பியத்ரோ பரோலின் 

குவைத் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையின் சாட்சிகளாகத் திகழ வேண்டும்!

குவைத்தில் உள்ள கலாச்சார மற்றும் மதப் பன்முகத்தன்மையைச் சுட்டிக்காட்டி, கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள் உண்மையான உடன் பிறந்த உறவை வெளிப்படுத்தியதுடன் அமைதி மற்றும் ஒன்றிப்பின் இறைவாக்கினர்களாகத் திகழ அவர்களுக்கு அழைப்புவிடுத்தார் கர்தினால் பரோலின்.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

ஜனவரி 15 -16 தேதிகளில் மேற்கொண்ட தனது மேய்ப்புப் பணி பயணத்தின் போது, குவைத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் நம்பிக்கை, அமைதி மற்றும் ஒன்றிப்பின் சாட்சிகளாகத் திகழ வேண்டுமென அவர்களை ஊக்கப்படுத்தினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

வடக்கு அரேபிய வட்டாரத்தின் அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலை விசுவாசிகளிடையே உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வாழ்த்துகளை வழங்கியதுடன் அவர்கள் ஆற்றி வரும் பணிகளுக்காகத் தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், அருள்பணியாளர்கள் பூர்ணத்துவம் அற்றவர்களாகத் திகழ்வதை விட, அன்பின் உருவமாகத் திகழ வேண்டும் என்று கேட்டுக்கொண்ட கர்தினால் பரோலின் அவர்கள், அர்ப்பண வாழ்வு வாழ்வோர் தங்களுடைய இறையழைத்தலை நற்செய்தி காட்டும், 'கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்' என்ற  படிப்பினைகளின் பாதையில் பயணிக்க வேண்டும் என்றும், அதன் வழியாக, தங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்றும் எடுத்துக் கூறினார்.

குவைத்தில் உள்ள கலாச்சார மற்றும் மதப் பன்முகத்தன்மையைச் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள் உண்மையான உடன் பிறந்த உறவை வெளிப்படுத்தி அமைதி மற்றும் ஒன்றிப்பின் இறைவாக்கினர்களாகத் திகழ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

திருக்குடும்ப இணைப் பேராலயத்தின் 65-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அங்குத் திருப்பலியைத் தலைமை தாங்கி சிறப்பித்த கர்தினால் பரோலின் அவர்கள், அதன் அரேபிய அன்னை கோவிலின் (Church of Our Lady of Arabia) ஆழமான மரியன்னை பக்தியைக் கருத்தில் கொண்டு, அது விரைவில் திருத்தலப் பேராலயமாக  (Minor Basilica) உயர்த்தப்பட உள்ளதை சுட்டிக்காட்டினார்.

கடவுள் வாழும் உண்மையான கோவில் விசுவாசிகளின் வாழ்க்கையே என்று எடுத்துக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், வளைகுடா நாடுகளில் உள்ள மற்ற கிறிஸ்தவத் திருச்சபைகளின் தலைவர்களைச் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

இறுதியாக, அவர்களுக்குள் இருக்கும் ஒருவரையொருவர் மதிக்கும் பண்பையும், இணைந்து செயல்படும் மனப்பான்மையையும் வெகுவாகப் பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 ஜனவரி 2026, 13:05