ஈரான் மற்றும் வெனிசுலா நெருக்கடிகளுக்கு அமைதித் தீர்வு காண அழைப்பு!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
ஈரான் மற்றும் வெனிசுலாவில் தொடர்ந்து நீடித்து வரும் நெருக்கடிகள் குறித்து தனது கவலைகளைத் தெரிவித்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், இந்த நெருக்கடிகளுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.
உரோமையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒன்றில் இவ்வாறு கவலை தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், ஈரானியப் போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் எண்ணற்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டின் சூழலை ஒரு முடிவற்ற துயரம் என்று குறிப்பிட்டார்.
வெனிசுலாவில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்குலைவுகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதில் திருஅவை கொண்டுள்ள உறுதிப்பாட்டை தெளிவுபடுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், அனைத்துலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள கிரீன்லாந்து விவகாரம் குறித்தும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
வெனிசுலா அரசிற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே சமரசம் செய்வதற்கு முன்னர் முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன என்பதை ஒப்புக்கொண்ட கர்தினால் பரோலின் அவர்கள், கடுமையான பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் அந்நாட்டில் அமைதியான சூழல், மக்களாட்சிமயமாக்கல் மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி ஆகியவை ஏற்பட வேண்டியதன் அவசியத்தை உறுதிபடத் தெரிவித்தார்.
அனைத்துலகப் பிரச்சனைகளைத் தீர்க்கப் பலதரப்புத் தூதரக உறவுகளே அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், அதிகாரத்தைப் பயன்படுத்தித் திணிக்கப்படும் தீர்வுகள் மோதல்களைத் தீவிரமாக்கி அது ஒரு பெரும் போருக்கு வித்திடக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இத்தாலியில் நிலவும் குடும்ப வன்முறைகள் குறித்தும் குறிப்பாக, லா ஸ்பெசியாவில் ஓர் இளம் மாணவர் கொல்லப்பட்ட துயரச் சம்பவத்தை சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், வன்முறையைத் தடுப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சேர்த்து இளைஞர்களிடையே சிந்தனைத் திறன் மற்றும் நற்பண்புகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வி முறை அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
உரோமையில் புனித பியர் ஜார்ஜியோ ஃபிராசாத்தின் அருளிக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வையொட்டி இடம்பெற்ற திருப்பலிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள் உலகளாவிய மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனைகள் குறித்துத் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்