தேடுதல்

கர்தினால் Kurt Koch (கோப்புப் படம்) கர்தினால் Kurt Koch (கோப்புப் படம்) 

அமைதிக்கு அடித்தளம் கிறிஸ்தவ ஒன்றிப்பு!

"2030-ஆம் ஆண்டில் வரவிருக்கும் ஆக்ஸ்பர்க் விசுவாச அறிக்கையின் (Augsburg Confession) 500-வது ஆண்டுவிழா, கத்தோலிக்க மற்றும் லூத்தரன் சபைகளுக்கிடையே நிலவும் உறவைச் சீர்தூக்கிப் பார்க்க ஒரு சிறந்த வாய்ப்பாகும்" : கர்தினால் Kurt Koch

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

"கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான தேடலும் பிளவுபட்டுக் கிடக்கும் இந்த உலகிற்குத் தேவையான அமைதிக்கான தேடலும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதபடி கைகோர்த்துச் செல்ல வேண்டும்" என்று கூறினார் கர்தினால் Kurt Koch.

வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீடத் துறையின்  தலைவர் கர்தினால் Koch அவர்கள், ஜனவரி 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான இறைவேண்டல் வாரத்தை முன்னிட்டு பேசுகையில், "கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது அமைதிக்கான ஒரு சமூகத் தேவை" என்றும் "கிறிஸ்தவச் சாட்சிய வாழ்விற்கு அவசியமான ஒன்று" என்றும்  சுட்டிக்காட்டினார்.

மேலும், "கிறிஸ்தவச் சபைகள் தங்களுக்குள் பிளவுபட்டு இருந்தால், இந்த உலகிற்கு அமைதியைப் பற்றி போதிக்கும் தார்மீக உரிமையை அவை இழக்கின்றன" என்று குறிப்பிட்ட கர்தினால் Koch அவர்கள், "கிறிஸ்தவர்களிடையே நிலவும் பிரிவினைகள், அமைதிக்காகத் திருஅவை ஆற்றும் பங்களிப்பைப் பலவீனப்படுத்துகின்றன" என்றும் சுட்டிக்காட்டினார்.

"புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தால் ஈர்க்கப்பட்டு, அர்மீனிய அப்போஸ்தலிக்க திருஅவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டிற்கான இறைவேண்டல் வாரம், ஒன்றிப்புக்கான வலிமையானதோர் அழைப்பை விடுக்கிறது" என்றும் குறிப்பிட்டார் கர்தினால் Koch.

"கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான முன்னேற்றத்தைக் காலவரையறைக்குள் அடக்க முடியாது" என்று கூறிய கர்தினால் Koch அவர்கள், "2030-ஆம் ஆண்டில் வரவிருக்கும் ஆக்ஸ்பர்க் விசுவாச அறிக்கையின் (Augsburg Confession) 500-வது ஆண்டுவிழா, கத்தோலிக்க மற்றும் லூத்தரன் சபைகளுக்கிடையே நிலவும் உறவைச் சீர்தூக்கிப் பார்க்க ஒரு சிறந்த வாய்ப்பாகும்" என்று குறிப்பிட்டார்

இறுதியாக, "உண்மையான கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது ஒரு பொதுவான விசுவாசத்தில் வேரூன்றி இருக்க வேண்டும்" என்று வலியுறுத்திய கர்தினால் Koch அவர்கள், "1,700 ஆண்டுகளுக்கு முன்னாள் இடம்பெற்ற  நிசேயா திருச்சங்கம் இன்றும் எக்காலத்திற்கும் பொருத்தமான ஒன்றாகத் திகழ்கிறது" என்று சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜனவரி 2026, 12:42