திருப்பீடத் தொழிலாளர் அலுவலகத்திற்கான புதிய சட்டம் அங்கீகரிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், திருப்பீடத் தொழிலாளர் அலுவலகத்திற்கான (ULSA) புதிய சட்டத்தை அங்கீகரித்துள்ளார் என்றும், இது திருப்பீடத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை ஊக்குவிக்கவும் பலப்படுத்தவும் உதவும் என்றும் செய்திக்குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
புதுப்பிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டம் கீழ்க்கண்ட முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது.
01. திருப்பீடச் செயலகம், உரோமை மறைமாவட்டம், வத்திக்கான் நலவாழ்வுப் பணிகள் மற்றும் ஓய்வூதிய நிதி ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக திருப்பீட தொழிலாளர் அலுவலக அமைப்பு (ULSA) விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
02. தொழிலாளர் அலுவலகப் பணிகளில் நிர்வாகங்கள் மற்றும் ஊழியர்களின் அதிக ஒன்றிணைந்த பயண (synodal) ஈடுபாடு, தனிப்பட்ட உறுப்பினர்கள் செயல் திட்டப் பணிகளை முன்மொழிய அனுமதிக்கிறது.
03. ஒழுங்குமுறைகளை உருவாக்குவதில் திருப்பீடத் துறைகள் மற்றும் பிற அமைப்புகளுக்கு உதவ திருப்பீடத் தொழிலாளர் அலுவலக அமைப்பிற்கான (ULSA) ஆலோசனைப் பங்கு குறித்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
04. தொழிலாளர் தகராறுகள் கட்டாயத் தீர்வுக்கு உட்படுத்தப்படல், மேலும் வழக்கறிஞர்கள் தொழிலாளர் சட்டம் மற்றும் வத்திக்கான் சட்டம் இரண்டிலும் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விதிமுறைகளை உருவாக்குதல், பணியாளர் நலனை மேம்படுத்துதல் மற்றும் பயிற்சியை ஊக்குவித்தல் உள்ளிட்ட தொழிலாளர் அலுவலக அமைப்பின் (ULSA) அனைத்து முந்தைய செயல்பாடுகளையும் இந்தப் புதிய சட்டம் உறுதிப்படுத்துகிறது.
இந்த மாற்றங்கள் வேலை வாய்ப்பு மற்றும் திருஅவையின் சமூகக் கோட்பாட்டின் மீதான திருத்தந்தையின் அக்கறையை வெளிப்படுத்துகின்றன. அதேவேளையில், அலுவலகத்திற்குள் செயல்திறன், ஒருங்கிணைப்பு மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்துகின்றன.
தொழிலாளர் அலுவலக அமைப்பு (ULSA), 1988-ஆம் ஆண்டு, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் நிறுவப்பட்டது. இது தற்போது ஒரு தலைவர், இரண்டு மதிப்பீட்டாளர்கள், ஓர் இயக்குனர், ஓர் ஒப்புரவிணக்க மற்றும் நடுவர் தீர்ப்பாயக் குழு மற்றும் விரிவாக்கப்பட்ட செயற்குழுவை உள்ளடக்கியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்