புனித பவுல் பெருங்கோவிலில் புனிதக் கதவை மூடும் திருநிகழ்வு!
செபாஸ்தியான் வனத்தையன் – வத்திக்கான்
"யூபிலி கொண்டாட்டத்தின் கருப்பொருளான எதிர்நோக்கு என்பது கிறிஸ்துவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக கடவுளின் உண்மையுள்ள அன்பின் மீதான நம்பிக்கையில் வேரூன்றி இருப்பது" என்று கூறினார் கர்தினால் ஜேம்ஸ் மைக்கேல் ஹார்வி
டிசம்பர் 28, ஞாயிறன்று, புனித பவுல் பெருங்கோவிலின் புனிதக் கதவை மூடும் நிகழ்வில் இடம்பெற்ற சிறப்புத் திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறிய கர்தினால் ஹார்வி அவர்கள், இந்த யூபிலி விழா, உலகளாவியக் குழப்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்தவ நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
கிறிஸ்தவ நம்பிக்கை இன்றைய போர்கள், நெருக்கடிகள், அநீதிகள் மற்றும் குழப்பங்களை புறக்கணிக்கவில்லை, மாறாக மேலோட்டமான நம்பிக்கையில் அல்லாமல் கடவுளின் உண்மையுள்ள அன்பின் மீதான நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது என்றும் உரைத்தார்.
இப்பெருங்கோவிலின் புனிதக் கதவு, வெறும் பொருளால் செய்யப்பட்ட ஒன்றல்ல, மாறாக, தன்னிறைவையும், வெறுமையையும் விடுத்து கடவுளின் இரக்கத்திற்குள் நுழைவதற்கான ஓர் அடையாளமே இந்தப் புனிதக் கதவு என விவரித்தார்.
யூபிலி கொண்டாட்டத்தின் கருப்பொருளைக் குறிப்பிடுகையில், எதிர்நோக்கு என்பது கிறிஸ்துவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலில் வேரூன்றிய ஒரு விசுவாச உறுதிமொழி என்று வலியுறுத்திய கர்தினால் ஹார்வி அவர்கள், துன்பம், பழிவாங்குதல் மற்றும் வெளிப்படையான தோல்வி ஆகியவற்றிலும் கூட, “எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தாராது” (உரோ 5:5) என்ற வார்த்தையில் புனித பவுலின் உறுதிப்பாட்டினையும் நினைவு கூர்ந்தார்.
இந்தப் புனிதக் கதவு 2000 மாம் ஆண்டு புனித ஆண்டிற்கான தயாரிப்புகளை நினைவுகூர்கிறது என்று கூறிய கர்தினால், இந்த யூபிலி ஆண்டு நிறைவுக்கு வந்தாலும், கடவுளுடைய இரக்கத்தின் கதவு என்றென்றும் திறந்திருக்கும் என்றும், ஆதலால், திருப்பயணிகள் தொடந்து தங்களின் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் அன்பின் சாட்சிகளாக வாழ மீண்டும் அழைக்கப்படுகிறார்கள் என்றும் எடுத்துக்காட்டினார்.
புனித மேரி மேஜர் மற்றும் புனித ஜான் இலாத்தரன் பெருங்கோவில்களின் புனிதக் கதவுகள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன. மேலும் ஜனவரி 6, செவ்வாய்க்கிழமை திருக்காட்சிப் பெருவிழாவன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் புனித பேதுரு பெருங்கோவிலின் புனிதக் கதவை மூடுவதற்கான திருநிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்