உக்ரைன் நாட்டின் புதிய அருளாளர் பீட்டர் பால் ஒரோஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஏழ்மை மற்றும் இரக்கம் என்னும் இரண்டு நற்பண்புகளின் வாயிலாக தனது வாழ்வில் பல நற்செயல்களை ஆற்றியவர் அருளாளர் பீட்டர் பால் ஒரோஸ் என்றும், அன்னை மரியாவிடம் ஆழமான பக்திகொண்டு அவரின் திரு உருவத்தை எப்போதும் தன்னோடு எடுத்துக்கொண்டு சென்றவர் என்றும் கூறினார் கர்தினால் Ryś.
செப்டம்பர் 27, சனிக்கிழமை உக்ரைனின் பில்கி கிராமத்தில் உள்ள புனித கிறிஸ்தோஸ்தம் ஆலயத்தில் அருள்பணியாளார் பீட்டர் பால் ஒரோஸ் அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் போலந்தின் Łódź உயர்மறைமாவட்ட பேராயரான கர்தினால் Grzegorz Ryś.
நம் வாழ்வில், மனித மற்றும் கிறிஸ்தவ வாழ்வில் நினைவாற்றல் முக்கியமானது, ஏனெனில் அது கடந்த கால மக்களையோ அல்லது நிகழ்வுகளையோ மறக்கப்படாமல் பாதுகாப்பதால் மட்டுமல்ல. நாம் எவ்வாறு வாழ வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பதை அது நமக்குச் சொல்வதால் அது மிக முக்கியமானது என்றும் கூறினார் கர்தினால் Ryś.
திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியதைப் போல, நினைவாற்றல் மிக முக்கியமானது அது உறுதியான அடிப்படைக் கடமைகளைக் கொண்டுள்ளது என்றும், ஒரு நாள் என்ன நடந்தது என்பதைப் பற்றி மட்டும் நமக்குச் சொல்லவில்லை. மாறாக, இன்று நாம் எவ்வாறு வாழ வேண்டும், செயல்பட வேண்டும் என்பதை அது நமக்குச் சொல்கிறது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால்.
அருளாளர் பீட்டர் கூறிய சில விடயங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன, அவர் எந்த தனிப்பட்ட சொற்றொடர்களையோ, மறையுரைகளையோ மறைக்கல்வி உரைகளையோ, நூல்களையோ எழுதியதாக அறியவில்லை; அவர் சொன்னதை விட முக்கியமாக அதை எப்படி வாழ வேண்டும் என்பதைத் தனது முன்மாதிரிகையான வாழ்க்கை மற்றும் செயலால் நமக்குக் கற்பித்தார் என்றும் கூறினார் கர்தினால் Ryś.
குருத்துவ இல்லத்தில் பயிற்சி பெறும்போதிலிருந்தே ஏழ்மையாக இருப்பது எப்படி என்பதை நன்கு அறிந்திருந்தார் என்றும், ஏழ்மையான வாழ்வைத் தேர்ந்ததால் மற்றவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் மனம் கொண்டவராக இருந்தார் புதிய அருளாளர் ஒரோஸ் என்றும் தெரிவித்தார் கர்தினால் Ryś.
ஆன்மிக வாழ்க்கையில் சிறப்புடன் விளங்கிய அவர் எங்கு சென்றாலும், செஸ்டோச்சோவாவின் அன்னையின் உருவத்தை எப்போதும் தனது இதயத்திற்கு நெருக்கமாகக் கொண்டிருந்தார் என்றும், இளைஞர்களுக்கு மரியன்னை பக்தியைக் கற்பித்தார், அவர்களை "மரியன்னைக் குழுக்களில்" சேர்த்தார். செபமாலை செபிக்க விரும்பினார். மரியாவுடனான அவரது உறவும் அவரை துறவற வாழ்க்கையை நன்முறையில் வாழத் தூண்டியது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Ryś.
1953-ஆம் ஆண்டு ஆகஸ்டு 28, அன்று, காவல்துறையினரால் இரண்டு தோட்டாக்களால் சுடப்பட்டு ஒரு கொடூரமான மரணத்தை அடைந்தார் என்று கூறிய கர்தினால் அவர்கள், அருளாளரின் வாழ்க்கை மற்றும் பணியானது, அவர் இறந்த 72 ஆண்டுகளுக்குப் பின்னரும், வாழ்க்கையின் முழுமையில் நம்மிடையே இருக்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்