பெண்களின் மாண்பிற்கு இழைக்கப்படும் அநீதி
மெரினா ராஜ் - வத்திக்கான்
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து பரவுவது மிகவும் கவலையளிக்கிறது என்றும், வீடுகளில், மோதல் மற்றும் மனிதாபிமானமற்ற சூழல்களில் என எல்லா இடங்களிலும் அவர்களின் மாண்பிற்கு அநீதி இழைக்கப்படுகின்றது இது கடுமையான செயல் என்றும் கூறினார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
செப்டம்பர் 22, திங்களன்று நியுயார்க் நகரில் நடைபெற்ற நான்காம் உலகப் பெண்கள் மாநாட்டின் 30-ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.
ஒவ்வொரு ஆண்டும் இலட்சக் கணக்கான சிறுமிகள் காணாமல் போய் மரணமடைகின்றனர் என்றும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் நாம் அதனை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் பேராயர் காலகர்.
நலவாழ்வுப் பராமரிப்பில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து பெண்களைப் பாதிக்கின்றன என்றும், 1990-ஆம் ஆண்டு முதல் தாய்வழி இறப்பு விகிதங்கள் போதுமான அளவிற்குக் குறைந்திருந்தாலும், அண்மைய ஆண்டுகளில் முன்னேற்றம் தடைபட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார் பேராயர் காலகர்.
"பிறக்காத குழந்தை முதல் முதியவர் வரை ஒவ்வொரு நபரின், குறிப்பாக மிகவும் பலவீனமான மற்றும் பாதிக்கப்படக்கூடியவரின் மாண்பானது மதிக்கப்படாவிட்டால் பெண்களுக்கான சமத்துவத்தை அடைய முடியாது என்று வலியுறுத்திய பேராயர் காலகர் அவர்கள், வாழ்க்கை உரிமையைப் பாதுகாப்பது அவசியம், ஏனெனில் அது மற்ற அனைத்து அடிப்படை உரிமைகளையும் ஆதரிக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.
வறுமையில் உள்ள பெண்களின் தேவைகள், வளர்ச்சிக்கான உத்திகள், கல்வியறிவு மற்றும் பெண்கல்வி, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருதல், அமைதி கலாச்சாரம் மற்றும் வேலைவாய்ப்பு, நிலம், மூலதனம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அணுகல் ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல் தளத்தின் முதன்மை அக்கறை இன்னும் புறக்கணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார் பேராயர் காலகர்.
பெண்களுக்கு சமத்துவத்தை உறுதி செய்வதற்கும், கடவுள் கொடுத்த மாண்பிற்கு மரியாதை செலுத்துவதற்கும் மாநிலங்கள் தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது திருஅவையின் ஆசை நம்பிக்கை என்றும் கூறினார் பேராயர் காலகர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்