தேடுதல்

திருப்பலியின்போது கர்தினால் மர்செல்லோ செமராரோ திருப்பலியின்போது கர்தினால் மர்செல்லோ செமராரோ   (@Vatican Media)

மனித வரலாற்றில் தனித்துவமான ஒன்று அன்னை மரியாவின் பிறப்பு

அன்னை மரியாவின் வாழ்க்கையில் நுழைந்ததைப்போலவே புனித கார்லோ அகுதீஸ் வாழ்க்கையிலும் கடவுள் எளிய வழியில் நுழைந்தார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்னை மரியாவின் பிறப்பு, ஒவ்வொரு குடும்பத்திலும் பிறக்கும் ஒரு புதிய குழந்தையின் பிறப்பு போலவே, ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு மட்டுமல்ல என்றும், மனித வரலாற்றில் தனித்துவமான ஒன்று, ஏனெனில் இது கிறிஸ்து மனுஉருவான மறைபொருளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.

செப்டம்பர் 7, ஞாயிறன்று திருஅவையின் இளம் புனிதராக புனித கார்லோ அகுதீஸ் அவர்கள் உயர்த்தப்பட்டதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், செப்டம்பர் 8 திங்களன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி  நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மர்செல்லோ செமராரோ.

செப்டம்பர் 8 அன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் அன்னை மரியின் பிறப்பு பெருவிழாவை நினைவுகூர்ந்த கர்தினால் செமராரோ அவர்கள், அன்னை மரியாவின் பிறப்பைக் கொண்டாடுவது என்பது கடவுளின் திட்டத்தை வரவேற்பதாகும் என்றும், வரலாற்றில் கடவுள் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை அங்கீகரிப்பதாகும் என்றும் கூறினார்.

நமது வாழ்க்கையின் சிறிய நிகழ்வுகளிலிருந்து தொடங்கி ஓர் உலகளாவிய பணியைச் செய்ய நேர்த்தியாகவும் பொறுமையாகவும் கடவுள் நம் வாழ்வில் நுழைகிறார் என்பதை அன்னை மரியாவின் பிறப்புப் பெருவிழா நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.

அன்னை மரியாவின் வாழ்க்கையில் நுழைந்ததைப்போலவே புனித கார்லோ அகுதீஸ் வாழ்க்கையிலும் கடவுள் எளிய வழியில் நுழைந்தார் என்றும், அவரது ஆன்மிக மற்றும் உலக வாழ்க்கையானது மனத்தாழ்ச்சியினால் குறிக்கப்பட்டது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் செமராரோ.

அன்னை மரியாவை விடியல் என்று அழைப்பதற்கான காரணம் விடியல் என்பது இருளை அகற்றி ஒளியைக் கொடுப்பது போல அன்னை மரியா நம் வாழ்வில் உள்ள துன்பம் என்னும் இருளை அகற்றில் விடியல் என்னும் இன்பத்தைக் கொடுக்கின்றார் என்பதை அடையாளப்படுத்துகின்றது என்றும், மனத்தாழ்ச்சியினைத் தனது ஆன்மிக வாழ்க்கையின் அடித்தளமாகக் கொண்டு விளங்கினார் என்றும் கூறினார்.

மனத்தாழ்ச்சி இல்லாமல், உண்மையான விசுவாசப் பயணம் தொடங்க முடியாது, ஆன்மிக ரீதியாக வளரவும் முடியாது என்று வலியுறுத்திய கர்தினால் செமராரோ அவர்கள், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மனத்தாழ்ச்சி இல்லாமல் புனிதத்துவம் இல்லை என்றும், தாழ்ச்சியே அன்னை மரியாவின் சிறப்பியல்பு என்றும் தெரிவித்தார்.

"கடலின் நட்சத்திரமாக விளங்கும் அன்னை மரியா, எப்போதும் கிறிஸ்துவை நோக்கிய வாழ்க்கைப் பாதையில் முன்னேற நமக்கு உதவுகிறார் என்றும், திருஅவையின் வானத்தில் பிரகாசிக்கும் விண்மீன் கூட்டத்தில் ஒருவராக இன்று புனித கார்லோ அகுதீஸ் திகழ்கின்றார் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் செமராரோ.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 செப்டம்பர் 2025, 14:07