கர்தினால் George Jacob Koovakad கர்தினால் George Jacob Koovakad  

உலக, பாரம்பரிய மதத்தலைவர்களுக்கான 8ஆவது மாநாடு

செப்டம்பர் 17 புதன்கிழமை முதல் 18 வியாழன் வரை கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெறுகின்றது உலக மற்றும் பாரம்பரிய மதங்களின் தலைவர்களுக்கான எட்டாவது மாநாடு.

மெரினா ராஜ்  - வத்திக்கான்

அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் மதங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் அவசியமான மூன்று காரணிகள், வளர்ச்சி மற்றும் நீதியின் தேவை, கடவுள் இல்லாமல் எந்த நம்பிக்கையும் இல்லை என்ற உறுதியும் இறுதியுமான எதார்த்தம், நாம் தனியாக மீட்படைவதில்லை என்ற எதார்த்தம் என்று எடுத்துரைத்தார் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு.

செப்டம்பர் 17 புதன்கிழமை முதல் 18 வியாழன் வரை கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெறும் உலக மற்றும் பாரம்பரிய மதங்களின் தலைவர்களுக்கான எட்டாவது மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் பல்சமய உரையாடல் திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு.

வளர்ச்சி என்பது ஒரு முன்நிபந்தனையாகும், இது மக்கள் மாண்புடனும், தேவையற்ற அழுத்தத்திலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியின் சாத்தியத்துடன் வாழ அனுமதிக்கிறது என்றும், இந்த வளர்ச்சி சிலருக்கு இருக்க முடியாது, என்றல்லாமல் அது சமமாக எல்லாருக்கும் இருக்க வேண்டும், இல்லாவிடில் அது நீடித்த நிலைத்த வளர்ச்சியாக இருக்காது என்ற திருத்தந்தை புனித ஆறாம் பால் அவர்களின் வரிகளை நினைவுகூர்ந்தார் கர்தினால் கூவக்காடு.

மேலும் உண்மையான மனித செழுமை... ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி அல்லது அனைத்து பரிமாணங்களிலும் ஒரு நபரின் முழு வளர்ச்சியிலிருந்து உருவாகிறது என்றும், உடல், சமூக, கலாச்சார, தார்மீக மற்றும் ஆன்மீகம் அது என்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் கருத்துக்களையும் மேற்கோள்காட்டினார் கர்தினால்.

அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்யும் ஒரு நியாயமான சமூகத்தை நோக்கி பணியாற்றுவது மிகவும் முக்கியமானது. அது இல்லாமல், அமைதி இருக்க முடியாது என்று வலியுறுத்திய கர்தினால் கூவக்காடு அவர்கள், சமூகத்தில் உண்மையான சமத்துவம் பொருளாதார, அரசியல், கலாச்சார, மொழியியல் மற்றும் மத ரீதியான விரிவானதாக இருக்க வேண்டும் என்றும், மத சுதந்திரமும் அமைதியின் இன்றியமையாத அங்கமாகும் என்றும் வலியுறுத்தினார்.

கடவுள் இல்லாமல் நம்பிக்கை இல்லை. நமது மரபுகள் அனைத்தும், அவற்றின் ஆழமான சாராம்சத்தில், இறுதி உண்மையைத் தேடுகின்றன என்றும் கூறிய கர்தினால் அவர்கள், கடவுளுடனான உரையாடல் மனிதகுலத்திற்கும் பூமிக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் திறக்கிறது என்றும் தெரிவித்தார்.

நம்பிக்கையின் அடையாளமாக இக்கூட்டம் மதம் அல்லது பின்னணி வேறுபாடுகள் நம்மை பிளவுபடுத்த வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது என்றும், நட்பு மற்றும் உரையாடலில் ஒருவருக்கொருவர் சந்திக்கும் செயலில், மனிதகுலத்தை அடிக்கடி பாதித்த பிரிவினை, வெறுப்பு மற்றும் வன்முறை சக்திகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றாக நிற்கிறோம் என்பதை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.     

மற்றவர்கள் அவநம்பிக்கையை விதைத்த இடத்தில், நாம் நம்பிக்கையைத் தேர்வு செய்கிறோம் என்றும், மற்றவர்கள் பயத்தை வளர்க்கக்கூடிய இடத்தில், நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம்; மற்றவர்கள் வேறுபாடுகளை தடைகளாக பார்க்கும்போது, அவற்றை பரஸ்பர செறிவூட்டலின் வழிகளாக அங்கீகரிக்கிறோம் என்றும் கூறினார். விரக்தியில் இருக்கும் உலகிற்கு நம்பிக்கையைக் கொண்டு வரும் இந்தப் பாதையில் நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து செல்வோம் என்று கூறி தனது உரையினை நிறைவு செய்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 செப்டம்பர் 2025, 16:17