படைப்பாளரான கடவுளிடமிருந்து வரும் கொடை
மெரினா ராஜ் - வத்திக்கான்
இவ்வுலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் ஒவ்வொன்றும் கொடைகள், அக்கொடைகள் பெறப்பட வேண்டும் மற்றும் வரவேற்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு கொடையும் கொடுப்பவரும், படைப்பாளருமான கடவுளிடமிருந்து வருகிறது என்றும் கூறினார் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே .
செப்டம்பர் 12, வெள்ளியன்று வத்திக்கானின் கசினா நான்காம் பியோ என்னுமிடத்தில் செப்டம்பர் 11, வியாழனன்று தொடங்கிய பன்னாட்டு குருத்துவ மாணவர்களுக்கான இரண்டாம் அமர்வில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவரான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே
"அமைதியான உலகத்திற்காக படைப்பு, இயற்கை, சுற்றுச்சூழல்" என்னும் தலைப்பில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தின் இரண்டாம் அமர்வானது படைப்பு மற்றும் இளைஞர்கள், மனிதனின் சூழலியல் மற்றும் அமைதி உலகத்தை நோக்கிய உரையாடல் என்னும் இரண்டு கருத்துக்களில் கவனம் செலுத்துகின்றது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் தாக்லே.
கடவுளின் சாயலிலும் உருவிலும் மனிதர்கள் படைக்கப்பட்டிருப்பதால், மனிதர்கள் படைப்பாளருடன் தொடர்பு கொள்ளும் திறனைப் பெற்றுள்ளனர் என்றும், அனைத்து கொடைகளையும் வழங்குபவருடன் தொடர்புகொள்வது ஒரு பிரிக்க முடியாத மனித அழைப்பு என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் தாக்லே.
படைப்பை நீண்ட நேரம் பார்ப்பது, படைப்பின் ஒலிகளைக் கேட்பது, படைப்பின் வாசனைகளை முகர்ந்து பார்ப்பது, படைப்பின் இயக்கங்களை உணருவது, படைப்பின் மறைபொருளைக் கண்டு வியப்பது, படைப்பாளரை அவரது உயிரினங்களில் புகழ்வது ஆகியவை நமது சிந்தனைத் தொழிலை உருவாக்குகின்றன என்றும் கூறினார் கர்தினால் தாக்லே.
பொய்யான கடவுள்கள் ஒற்றுமையின்மையையும் நல்லிணக்க அழிவையும் உருவாக்குகிறார்கள் என்றும், உண்மையான கடவுள் மட்டுமே வாழ்க்கை, நல்லிணக்கம் மற்றும் பகிர்வை உருவாக்குகிறார் என்றும் கூறினார் கர்தினால் தாக்லே.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்