நல்லிணக்கக் கலாச்சாரத்தை ஊக்குவித்தல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மதங்களுக்கு இடையேயான உரையாடல் என்பது ஒருவரின் மதத்தை மாற்றுவது பற்றியது அல்ல என்றும், செவிசாய்த்தல், புரிந்துகொள்ளுதல் மற்றும் மதித்தல் பற்றியது என்றும் கூறினார் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு.
செப்டம்பர் 6 முதல் 12 வரை வங்காளதேசத்தில் உள்ள Krishibid நிறுவனத்தில் (Promoting a Culture of Harmony) “நல்லிணக்கக் கலாச்சாரத்தை ஊக்குவித்தல்” என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார் பல்சமய உரையாடல் திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு.
மதங்களுக்கு இடையேயான உடையாடல் என்பது ஒருவர் மற்றவரை அன்பு செய்வது, என்றும் அவர்களின் இதயங்கள் மற்றும் ஆன்மாக்களுக்கு மையமாக இருப்பதை மதிப்பது பற்றியது என்றும் எடுத்துரைத்த கர்தினால் கூவக்காடு அவர்கள், நல்லிணத்தை வளப்படுத்தப்படுவதற்காக நம்பிக்கையை வளர்த்தல் மற்றும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் கூறினார்.
கிறிஸ்தவர்களுக்கும் பிற மதத்தினருக்கும் இடையே நல்லிணக்க மரியாதை, பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் கத்தோலிக்க திருஅவையின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது அவசியம் என்றும், பொது நன்மைக்காக சமூக நீதி மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் முயற்சிகளில் அனைத்து குழுக்களும் ஈடுபடுவது இன்றியமையாத தேவை என்றும் வலியுறுத்தினார் கர்தினால் கூவக்காடு.
மற்றவர்களின் நம்பிக்கைகளை மதித்தல், பல்வேறு கண்ணோட்டங்களைப் புரிந்துகொள்வது மற்றும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள விருப்பம் காட்டுதல் என்னும் மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான மூன்று முக்கிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள திருஅவை அனைத்து நல்லெண்ண மக்களையும் ஊக்குவிக்கிறது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் கூவக்காடு.
கடவுளின் மகத்துவத்தால் நிறைந்த ஒரு உலகில் வாழும் நாம், எல்லா இடங்களிலும், குறிப்பாக இயற்கையிலும் மனித நிலையிலும், ஏராளமான பன்முகத்தன்மையை நாம் எளிதாகக் காண்கிறோம் என்று எடுத்துரைத்த கர்தினால் கூவக்காடு அவர்கள், இந்த அழகுக்காக, நாம் எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.
கடவுள் அனைத்தையும் படைத்தவர் என்பதிலும், கடவுளின் மகிமையும் அருளும் நம்மை இங்கு வழிநடத்தி, நமது இறுதி இலக்கை நோக்கி நம்மை இழுக்கிறது என்பதிலும் நமது நன்றியுணர்வு அடித்தளமாகக் கொண்டுள்ளது என்று எடுத்துரைத்த கர்தினால் கூவக்காடு அவர்கள், கடவுளுக்கு நம் இதயங்களைத் திறக்கவும், அவரை வணங்கவும், மனிதகுலத்திற்கும் அவரது படைப்புகளுக்கும் சேவை செய்யவும் நாம் வடிவமைக்கப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்