உண்மை, நீதி மற்றும் அமைதி நிறைந்த ஓர் உலகைக் கட்டியெழுப்புவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒவ்வொரு நபரின் ஆன்மிக, சமூக மற்றும் பொருள் நல்வாழ்வை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கு அனைத்துப் பெருமுயற்சிகளும் முன்னுரிமை அளிப்பது கட்டாயமாகும் என்று கூறினார் பேராயர் Gabriele Caccia.
ஜூலை 22, இச்செவ்வாயன்று, நியூயார்க் நகரில் இடம்பெற்ற பொருளாதார மற்றும் சமூக அமைப்பின் (ECOSOC) உயர்மட்ட அரசியல் மன்றத்தின் பொது விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Gabriele Caccia.
ஐக்கிய நாடுகள் அவையின் அடிப்படைக் கொள்கைகளான அமைதி, ஒத்துழைப்பு, மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டிற்கான திருப்பீடத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பேராயர் Caccia அவர்கள், இவை அனைத்து உலகளாவிய முயற்சிகளையும் நெறிப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக, நிலையான வளர்ச்சிக்கான 2030-ஆம் ஆண்டின் இலக்கை அடைவதில் துணைபுரிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்னேற்றம் இருந்தபோதிலும், தீவிர வறுமை, பசி மற்றும் கல்வி மற்றும் நலவாழ்வுப் பராமரிப்புக்கான அணுகல் இல்லாமை பரவலாக உள்ளன என்பதையும் தனது உரையில் குறிப்பிட்டுக் காட்டினார் பேராயர் Caccia.
குழந்தைகள், முதியவர்கள், ஏழைகள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மேல் குறிப்பாக கவனம் செலுத்தி, ஆன்மிகம், சமூகம் மற்றும் பொருள் நல்வாழ்வை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார் பேராயர் Caccia.
இதுகுறித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் எண்ணங்களை மேற்கோள் காட்டி, உலகளாவிய சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கும் ஒன்றிப்பை மேம்படுத்துவதற்கும் தார்மீகக் கட்டாயத்தை எடுத்துரைத்தார் பேராயர் Caccia.
ஐக்கிய நாடுகள் அவையின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட பன்முகத்தன்மைக்கு அழைப்புவிடுத்த பேராயர், உண்மையான மனித வளமையை மேம்படுத்துவதற்கு குடும்பங்கள், கல்வி மற்றும் உடல்நலப் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டினார்.
இறுதியாக உண்மை, நீதி மற்றும் அமைதியின் அடிப்படையில் ஓர் உலகைக் கட்டியெழுப்ப, ஒன்றிப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வேண்டுகோளைச் சுட்டிக்காட்டி தனது உரையை நிறைவு செய்தார் பேராயர் Caccia.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்