மெக்சிகோவின் குவாதலுப்பே அன்னை மரியா திரு உருவப்படத்தை சுமந்து செல்லும் சிறார். மெக்சிகோவின் குவாதலுப்பே அன்னை மரியா திரு உருவப்படத்தை சுமந்து செல்லும் சிறார்.   (2022 Getty Images)

கடவுளின் தாய், உலக மக்களின் தாய் அன்னை மரியா

மன்னிப்பு என்ற வார்த்தைகள் சொல்வது எளிது, ஆனால் வாழ்வது கடினம், மன்னிப்பு என்பது நம் உலகத்தை பாதிக்கும் பல தீமைகளை குணப்படுத்துவதற்கான முதல் படி - பேராயர் காலகர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மெக்சிகோவின் குவாதலுப்பே அன்னை மரியா, சீர்குலைந்திருந்த வாழ்க்கை முறை கொண்ட மக்களுக்கு தாய்வழி ஆறுதலை வழங்கினார் என்றும், ஒரு புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பைத் தொடங்கி வைத்து, தன்னை கடவுளின் தாயாகவும், புதிய உலக மக்களின் தாயாகவும் வெளிப்படுத்தினார் என்றும் கூறினார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

ஜூலை 27, ஞாயிறன்று மெக்சிகோவில் உள்ள தூய குவாதலுப்பே அன்னை மரியா திருத்தலத்தின் 494ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு அத்திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

1531-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குவாடலூப்பே அன்னை மரியாவின் காட்சியைக் கண்ட தூய ஜுவான் தியேகோவின் சான்றுள்ள வாழ்வை சற்று சிந்தித்துப் பார்க்க அழைப்பு விடுத்த பேராயர் அவர்கள், அன்னை மரியா அவருக்கு மக்களில் ஒருவராக எளிமையான வடிவத்தில் காட்சியளித்தார் என்றும் கூறினார்.

ஓர் எளிய மனிதராகவும், பூர்வீக பழங்குடியின மக்களுள் ஒருவராகவும், இருந்த ஜுவான் தியேகோ மீது அற்புதங்களைச் செய்ய விரும்பும் கடவுளின் பார்வை தங்கியிருந்தது என்றும், தனது 55-ஆவது ஒரு மலையில் கடவுளின் தாயைப் பார்த்த திருமணமானவரான தியேகோவிற்கு, “உன் முகத்தையும், இதயத்தையும் சோர்வடையச் செய்யாதே: இங்கே இருக்கும் நான் உனது தாயல்லவா? எனக்கூறி அன்னை மரியா உறுதியளித்தார் என்றும் எடுத்துரைத்தார் பேராயர்.

மலையுச்சிக்குச் சென்று, சில பூக்களைப் பறித்து வருமாறு தியேகோவிடம்  அன்னை மரியா கூற அவரும் குளிர்காலத்தில் பூக்கள் பூக்காது என்பதை அறிந்திருந்தும் அன்னை மரியா மேல் கொண்ட நம்பிக்கையினால் மலையுச்சிக்குச் சென்று, அங்கே அன்னை கூறியது போல அழகான மலர்கள் இருப்பதைக் கண்டு அதனைப் பறித்து வந்தார் அதனை அன்னை மரியா தனது மேலங்கியில் வைத்துக்கொண்டார் என்ற வரலாற்றையும் நினைவுகூர்ந்தார் பேராயர் காலகர்.

மலர்களுடன் காட்சியளிக்கும் அன்னை மரியின் இத்தகைய உருவப்படமானது (டில்மா) வெறும் நினைவுச்சின்னம் அல்ல. பிரிவிலிருந்து ஒற்றுமையையும், பயத்திலிருந்து நம்பிக்கையையும், வலியிலிருந்து குணத்தையும் கொண்டுவரும் கடவுளின் சக்திக்கு ஓர் உயிருள்ள சான்றாக விளங்குகின்றது என்று தெரிவித்த பேராயர் காலகர் அவர்கள், இலட்சக் கணக்கான மக்கள் கட்டாயத்தால் அல்ல, மாறாக ஒரு தாயின் அன்பான அழைப்பால், கிறிஸ்துவை நோக்கி வந்தனர் என்றும் கூறினார்.

பல நூற்றாண்டுகளாக, நம்பிக்கையில் ஆழமாக வேரூன்றிய மெக்சிகோ கிறிஸ்தவர்கள், கடுமையான துன்புறுத்தலை எதிர்கொண்டு, கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர் என்றும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருவழிபாட்டு சுதந்திரத்திற்காக தங்கள் உயிரைக் கையளித்த விசுவாசமுள்ள கத்தோலிக்கர்கள், அருள்பணியாளர்கள், மற்றும் பொது நிலையினரை நாம் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

குவாதலுப்பே அன்னை மரியா திருத்தலம் உள்ள இடமானது அன்னை மரியா காட்சியளித்ததற்கான ஒரு நினைவிடமாக மட்டுமல்லாது, மறைப்பணி நிலையமாகவும் உள்ளது என்று எடுத்துரைத்த பேராயர் காலகர் அவர்கள், கடவுளை வழிபட, அயலாரை அன்பு செய்ய, உயிரைப் பாதுகாக்க, ஏழைகளுக்குப் பணியாற்ற, புலம்பெயர்ந்தோரை வரவேற்க, என "ஒரு கள மருத்துவமனையாக" செயல்படுகின்றது என்றும் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளுக்கேற்ப குவாதலுப்பே அன்னை மரியா திருத்தலமானது, இரக்கம் குணமளித்தல் மற்றும் நம்பிக்கையை மக்களுக்கு வழங்கும் இடமாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்ட பேராயர் காலகர் அவர்கள், செபமும் அது வளர்க்கும் நம்பிக்கையும், நம்மை மன்னிப்புக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மன்னிப்பு என்ற வார்த்தைகள் சொல்வது எளிது, ஆனால் வாழ்வது கடினம் என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், மன்னிப்பு என்பது நம் உலகத்தை பாதிக்கும் பல தீமைகளை குணப்படுத்துவதற்கான முதல் படி என்றும் சுட்டிக்காட்டினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஜூலை 2025, 13:06