சகோதரத்துவப் பார்வை கொண்டவர்களாக இருப்போம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
சக்கேயு மீது இயேசு காட்டிய சகோதரத்துவ பார்வை கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றும், தாழ்ச்சியுடனும், அன்புடனும், சகோதரத்துவப் பார்வை கொண்டவர்களாக நம்முடன் வாழ்பவர்களுடன், நாம் பயணிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் ஆயர் Michele Di Tolve
ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை உரோம் நகரில் உள்ள தெர்மினி தொடர்வண்டி சந்திப்பு நிலையத்தைச் சுற்றி வாழும், வீடற்ற மக்களுக்கான சிலுவைப் பாதையைத் தலைமையேற்று வழிநடத்தியபோது இவ்வாறு கூறினார் உரோம் நகர் திருப்பீட உயர்குருமட தலைவரான ஆயர் Michele Di Tolve
மிகவும் பலவீனமானவர்களாக, ஏழைகளாக, தேவையிலிருப்பவர்களாக வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நாம் உணர வேண்டும் என்று வலியுறுத்திய ஆயர் Tolve அவர்கள், செல்லவேண்டிய இலக்குகளை அடைய அதிகமாக முயற்சிக்கும் நாம், நம்மை வாழ வைக்கும் மனித உறவிலிருந்து பல நேரங்களில் திசை திரும்புகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.
எதிர்நோக்கின் சிலுவைப் பாதையானது நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது என்றும், நம்பிக்கை, ஆதரவு, ஒற்றுமை, நெருக்கம் போன்றவற்றை எடுத்துரைக்கும் சிலுவைப் பாதையானது எதிர்நோக்கினை எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்கும் பாதையாக இருக்கின்றது என்றும் கூறினார் ஆயர் தோல்வே.
வறுமையினால் தனிமைப்படுத்தப்பட்டு, வீடின்றி தெருக்களில் வாழும் மக்களை ஆதரித்து, மாண்புடன் அவர்களைப் பாதுக்காக்க வேண்டும் என்றும், வறுமையை விட மோசமான விடயம் வேறு எதுவும் இல்லை என்றும் சிலுவைப்பாதையின் நிறைவில் எடுத்துரைத்தார் உரோம் நகர் காரித்தாஸ் இயக்கத்தின் தலைவர் Giustino Trincia.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்