படைப்பின் அக்கறைக்கான உலக ஜெப நாள் தலைப்பு வெளியீடு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இவ்வாண்டின் படைப்பின் அக்கறைக்கான உலக ஜெப நாள் தலைப்பாக ‘அமைதி மற்றும் எதிர்நோக்கின் விதைகள்' என்பதை திருத்தந்தை தேர்ந்துள்ளதாக திருப்பீடம் அறிவிக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் தேதி சிறப்பிக்கப்படும் படைப்பின் மீதான அக்கறைக்கான உலக செப நாளுக்குக்கான தலைப்பை வெளியிட்டுள்ளது ஒருங்கிணைந்த மனித குல வளர்ச்சிக்கான திருப்பீடத்துறை.
நம் பொதுவான இல்லம் குறித்த அக்கறைக்கு அழைப்புவிடுக்கும் Laudato si’ என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் 10ஆம் ஆண்டு இந்த 2025 யூபிலி ஆண்டில் இடம்பெறுவது குறித்து எடுத்துரைத்த திருப்பீடத்துறை, எசாயா நூலின் 32ஆம் பிரிவின் 14 முதல் 18 வரையுள்ள வரிகளிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டிற்கான தலைப்பாக, ‘அமைதி மற்றும் எதிர்நோக்கின் விதைகள்' என்பதை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
படைப்பின் மீதான அக்கறைக்கான உலக செப நாள் செப்டம்பர் முதல் தேதி சிறப்பிக்கப்பட்டு, இயற்கையின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த புனித பிரான்சிஸ் அசிசியின் திருவிழாவான அக்டோபர் 4ஆம் தேதி வரை படைப்பிற்கான கிறிஸ்தவ ஒன்றிப்பு மாதம் சிறப்பிக்கப்படுகிறது.
படைப்பிற்கான அக்கறையும் அமைதியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதை திருத்தந்தையர்கள் தங்கள் சுற்றுமடல்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது ஒருங்கிணைந்த மனித குல வளர்ச்சிக்கான திருப்பீடத்துறை.
நம் உலகின் நசிவு அல்லது தரத்தாழ்ச்சிக்கும் போருக்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பு குறித்தும் எடுத்துரைக்கும் இத்திருப்பீடத்துறை, எதிர் நோக்கினை நம்மில் வளர்க்க உதவும் நீடித்த, நிலைத்த அமைதியை உருவாக்க ஒவ்வொருவரும் இறைவேண்டலில் ஈடுபடவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.
விதை என்பது நம் நீண்ட கால அர்ப்பணத்தைக் குறிப்பதையும், அனைத்துக் கண்டங்களிலும் அமைதியின் விதைகள் முளைக்கும் என்ற நம்பிக்கையையும் ஒருங்கிணைந்த மனித குல வளர்ச்சிக்கான திருப்பீடத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்