வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ள வத்திக்கான் வளாகம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இத்தாலி மற்றும் ஹாலந்திலிருந்து வரவழைக்கப்படும் ஆயிரக்கணக்கான பல வண்ண மலர்களால் புனித வாரக் கொண்டாட்டங்களின்போது வத்திக்கான் வளாகமும் தூய பேதுரு பெருங்கோவிலும் அலங்கரிக்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளது திருப்பீடம்.
ஏப்ரல் 13, குருத்து ஞாயிறன்று வத்திக்கான் வளாகத்தில் உரோம் உள்ளூர் நேரம் காலை 10 மணியளவில் நடைபெற உள்ள குருத்தோலைப் பவனிக்குப் பயன்படும் வகையில் 150 குறுத்தோலைகள் மற்றும் 2 இலட்சம் ஒலிவக் கிளைகளானது லாஷியோ பகுதியில் உள்ள தேசிய எண்ணெய் நகர இயக்கத்தின் தலைவர் Antonio Balenzano அவர்களால் விநியோகிக்கப்பட உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
2003ம் ஆண்டில் சன்ரேமோ குருத்தோலை ஆய்வு மற்றும் சமூக மையத்தால் தொடங்கப்பட்ட குருத்து ஞாயிறு திருவழிபாட்டுக்கென குருத்தோலைகளை திருத்தந்தைக்கு நன்கொடையாக வழங்கும் பழக்கம் இம்முறையும் தொடர்கின்றது என்றும், சன்ரெமோவை தளமாகக் கொண்ட தனி உரிமையாளர் எரிகோ கிராசியா அவர்களும் குறுத்தோலைகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தூய பேதுரு பெருங்கோவில், வத்திக்கான் வளாகத்தில் உள்ள புனித பேதுரு பவுல் திரு உருவச்சிலைகள், குருத்தோலைப் பவனி ஆரம்பமாகும் வளாகத்தின் நடுப்புறம் உள்ள கோபுரத்தூண் போன்றவற்றில் வைக்கப்பட இருக்கும் பெரிய ஒலிவக் கிளைகள் மற்றும் மலர் அலங்காரங்களை உரோமில் உள்ள Flora Olanda மலர் அலங்கார நிறுவனம் பொறுப்பேற்று ஏற்பாடு செய்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 19 சனிக்கிழமை தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற உள்ள உயிர்ப்புப் பெருவிழா நள்ளிரவு திருப்பலிக்காக, பெருங்கோவிலில் மலர் அலங்காரங்களை நக்லோ உயிரிதொழிநுட்ப (biotechnology) மையத்தைச் சார்ந்தவர்கள், ஸ்லோவேனியாவின் நோவோ மெஸ்டோவில் உள்ள உயிரிதொழிநுட்ப மையம் (biotechnology) மற்றும் சுற்றுலா மையத்தைச் சார்ந்தவர்கள் பொறுப்பேற்று செய்ய உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 20, உயிர்ப்பு ஞாயிறன்று, ஹாலந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பல ஆயிரக் கணக்கான மலர்களால் வத்திக்கான் வளாகம் அலங்கரிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது திருப்பீடம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்