ஒளி, உயிர்ப்பு மற்றும் வாழ்வின் பிள்ளைகள் நாம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
எருசலேமில் வாழும் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் யாருக்கும் அஞ்சவில்லை மாறாக ஒளியின் பிள்ளைகளாக, உயிர்ப்பின் பிள்ளைகளாக வாழ்வின் பிள்ளைகளாக இருக்கின்றோம் என்பதை எடுத்துரைப்பதற்காக ஒன்று கூடியிருக்கின்றோம் என்று கூறினார் முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.
ஏப்ரல் 13, குருத்துஞாயிறை முன்னிட்டு எருசலேமில் நடைபெற்ற குருத்தோலைப் பவனியின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.
காசா முதல் நாசரேத் வரை, பெத்லகேம் முதல் ஜெனின் வரை, யோர்தான் முதல் சைப்ரஸ் வரை அனைவரும் நம்முடன் இணைந்து செபிக்கிறார்கள் என்று எடுத்துரைத்த முதுபெரும்தந்தை அவர்கள், எருசலேமின் கிறிஸ்தவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாளில், எருசலேமில் கிறிஸ்தவ நம்பிக்கையின் சுடரை, கிறிஸ்துவின் பிரசன்னத்தை நம் மத்தியில் உயிருடன் வைத்திருப்பவர்களாக நாம் இருக்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
மிகவும் கடினமான காலத்தில் வாழ்ந்தாலும் ஒளி, உயிர்ப்பு மற்றும் வாழ்வின் பிள்ளைகளாக நாம் அச்சமின்றி இருக்கின்றோம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக குருத்தோலைப் பவனியில் நாம் பங்கேற்கின்றோம் என்று தெளிவுபடுத்திய முதுபெரும்தந்தை அவர்கள், பாடுகளின் வாரத்தில் பயணிக்க இருக்கும் நாம், உலகின் பல இடங்களில் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களோடு இணைந்து இப்புனித வாரத்தில் நுழைவோம் என்றும் கூறினார்.
எல்லாவற்றையும் வெல்லும் அன்பில் நம்பிக்கை வைத்து வாழ்பவர்கள் எருசலேம் கிறிஸ்தவர்கள் என்று எடுத்துரைத்த முதுபெரும்தந்தை அவர்கள், இயேசுவின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்பதை ஆற்றலுடனும் நம்பிக்கையுடனும் துணிவுடனும் எடுத்துரைப்பவர்களாக இருப்போம் என்று வலியுறுத்தினார்.
எருசலேமிற்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்த மக்கள் தங்களது மேலாடைகள், குருத்தோலைகள், ஒலிவக்கிளைகள் போன்றவற்றை இயேசுவின் காலடிகளில் வைத்தது போல நாமும் நமது செபம், செயல், அவர்மீதான தாகம் போன்றவற்றை இயேசுவின் பாதங்களில் வைப்போம் என்றும் கூறினார் கர்தினால் பிஸ்ஸபால்லா.
சிலுவை மரணத்தின் அடையாளமல்ல, மாறாக, அன்பின் அடையாளம் என்பதை உணர்ந்தவர்களாய் நாம் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய முதுபெரும்தந்தை அவர்கள், இயேசுவைச் சேர்ந்தவர்கள் இடித்துத்தள்ளுபவர்களல்ல, எப்போதும் கட்டியெழுப்புபவர்கள், வெறுப்புடன் அல்ல மாறாக அன்பு மற்றும் ஒற்றுமையுடன் எவ்வாறு பதிலளிப்பது என்பதை அறிந்தவர்கள், நிராகரிப்பை அல்ல ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்டவர்கள் என்றும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்