குழந்தை இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாக ஐ.நா.வில் திருப்பீடம் கவலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உலகின் பல்வேறு பகுதிகளில் குழந்தை இறப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக ஐ.நா.வின் மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி குறித்த 58வது கூட்டத்தில் திருப்பீடத்தின் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் பேராயர் கபிரியேலே காச்சா.
ஐ.நா. நிறுவனத்திற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகச் செயல்படும் பேராயர் காச்சா அவர்கள், தடுக்கப்படக்கூடிய வழிகள் இருப்பினும், பெருமெண்ணிக்கையில் குழந்தை இறப்புக்கள் இடம்பெற்றுவருவது கவலை தருவதாக உள்ளது என ஐ.நா. கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
அனைத்து வயதினருக்கும் நல ஆதரவுப் பணிகள் வழங்கப்பட்டு, அவர்கள் நல்சுகத்துடன் வாழ உறுதி வழங்க வேண்டிய கடமையை வலியுறுத்திய பேராயர் காச்சா அவர்கள், அண்மைக்காலங்களில் நல ஆதரவில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வருகின்றபோதிலும், சில பகுதிகளில் நல ஆதரவுச் சவால்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என தெரிவித்தார்.
தடுக்கவல்ல காரணங்களால், குறிப்பாக, சத்துணவின்மை மற்றும் தொற்று நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் பல இலட்சக்கணக்கானோர் இறந்துவருவதாகவும், 2015ஆம் ஆண்டிலிருந்து குழந்தை பிறப்பின்போது தாய்மார்களின் இறப்பும் அதிகரித்துள்ளதாகவும் கவலையை வெளியிட்டார் பேராயர்.
கடவுள் வழங்கிய மனித மாண்பு அனைத்து நிலைகளிலும் மதித்துக் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய பேராயர் காச்சா அவர்கள், வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் வளம்பெற ஒன்றிணைந்த மனித குல வளர்ச்சியில் ஈடுபடவேண்டியதன் அவசியத்தையும் ஐ.நா. கூட்டத்தில் எடுத்தியம்பினார்.
குடும்பங்களிலிருந்தே குழந்தைகள் அனைத்தையும் கற்றுக் கொள்வதால் குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டிய முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார் பேராயர் காச்சா.
வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே நல ஆதரவு நடவடிக்கைகளில் காணப்படும் பெரும் வேறுபாடு குறித்து உணர்ந்தவர்களாக, இவ்விடைவெளியை அகற்ற பணக்கார நாடுகள் முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த பேராயர் காச்சா, ஏழை நாடுகளை அழுத்திவரும் வெளிநாட்டுக்கடன் அகற்றப்படுவதற்கான வழிகள் ஆராய்ந்தறியப்பட வேண்டும் என விண்ணப்பித்தார்.
பல ஏழை நாடுகள் தங்கள் ஏழ்மை அகற்றும் திட்டங்களுக்கென செலவழிக்கும் தொகையைவிட வெளிநாட்டுக் கடன் தொடர்பாக செலவழிக்கும் தொகை அதிகம் என்பதையும் எடுத்தியம்பினார் ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் காச்சா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்