படைப்பின் காலம், படைப்பை பாதுகாக்கவேண்டும் என்பதை...
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
உலக அளவில் கிறிஸ்தவர்கள் சிறப்பித்துவரும் படைப்பின் காலத்தை மையப்படுத்தி, காணொளிச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவரான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், படைப்பின் பாதுகாவலர்களாகச் செயல்பட, நமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை, மீள்ஆய்வு செய்ய, படைப்பின் காலம், ஏற்றதொரு தருணம் என்று கூறியுள்ளார்.
செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அக்டோபர் 04, சூழலியலின் பாதுகாவலராகிய அசிசி நகர் புனித பிரான்சிசின் விழாவாகிய வருகிற ஞாயிறு முடிய கடைப்பிடிக்கப்பட்டுவரும் படைப்பின் காலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கர்தினால் தாக்லே அவர்கள், “பூமியின் யூபிலி” என்ற தலைப்பில், இந்த காணொளியை, அவர், கொரோனா தொற்றுக்கிருமியால் பாதிக்கப்படுவதற்குமுன், பதிவுசெய்திருந்தார்.
கிறிஸ்தவர்கள் அனைவரும், கடவுளோடும், அவரது படைப்போடும் நமக்குள்ள உறவைப் புதுப்பிப்பதற்கு, படைப்பின் காலம் நம்மைத் தூண்டுகிறது என்று கூறியுள்ள, கர்தினால் தாக்லே அவர்கள், இந்த உலகம் கோவிட்-19 கொள்ளைநோயின் நெருக்கடியை எதிர்கொண்டு வந்தாலும், இந்த நமது அழைப்பை, மனமாற்றம், அர்ப்பணம் மற்றும், கொண்டாட்டம் ஆகியவற்றின் வழியாக ஆற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த படைப்பின் காலம், திருவழிபாட்டுக் காலம் எனவும் கூறியுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், கடவுளின் கொடை மற்றும், அன்பின் அடையாளங்களாகிய இயற்கையின் நன்மைத்தனத்தை, இறைவேண்டலிலும், குறிப்பாக, திருப்பலியிலும் கொண்டாடலாம் என்று கூறியுள்ளார்.
படைப்பின் காலத்தை, தெளிவான சமுதாயச் சுற்றுச்சூழல் செய்தியோடு கொண்டாடவேண்டும், ஏனெனில், நாம் படைப்பை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது, வாழ்வு மற்றும், மனிதர் மீதுள்ள நம் எண்ணத்தையும் சார்ந்தது என்றும், ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ள படைப்பின் குடும்பத்திலும், மனிதக் குடும்பத்திலும், குறிப்பாக வறியவரோடு இக்காலத்தைக் கொண்டாடுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்