தேடுதல்

ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை "கிறிஸ்துவில் ஒரே இதயம்" என்ற கருப்பொருளில் உலக ஆர்மேனிய கத்தோலிக்க இளையோர் தினங்கள் நடைபெறுகின்றன. ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை "கிறிஸ்துவில் ஒரே இதயம்" என்ற கருப்பொருளில் உலக ஆர்மேனிய கத்தோலிக்க இளையோர் தினங்கள் நடைபெறுகின்றன. 

லெபனோனில் தொடங்கிய 2026 உலக அர்மேனிய கத்தோலிக்க இளையோர் மாநாடு!

"கிறிஸ்துவில் ஒரே இதயம்" என்ற கருப்பொருளில், 2026 உலக அர்மேனிய கத்தோலிக்க இளையோர் மாநாடு லெபனோனில் தொடங்கியுள்ளது. பல நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாட்டில், இறைவேண்டல், திருப்பலி, கருத்தரங்குகள், தியானம் மற்றும் சமூகப்பணி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

 "கிறிஸ்துவில் ஒரே இதயம்" (One Heart in Christ) என்ற கருப்பொருளில், 2026 உலக அர்மேனிய கத்தோலிக்க இளையோர் மாநாடு (World Armenian Catholic Youth Days – WAYD) லெபனோனின் அன்ஜார் நகரில் தொடங்கியுள்ளது.

அர்மேனிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை நடைபெறுகிறது. அர்மேனிய கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும்தந்தை ரஃபேல் பெத்ரோஸ் மினாசியன் அவர்கள் தலைமையில் தொடக்கத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

இந்த தொடக்க விழாவில் சிரியா, ஈராக், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட அர்மேனிய கத்தோலிக்க இளைஞர்கள் பங்கேற்றனர்.

தனது மறையுரையில் முதுபெரும்தந்தை மினாசியன் அவர்கள், இளைஞர்களே திருஅவையின் துடிக்கும் இதயமும், அதன் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையும் என்று குறிப்பிட்டு, கிறிஸ்துவோடும் ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள உறவையும் ஆழப்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

ஒரு வாரம் நடைபெறும் இம்மாநாட்டில் திருப்பலிகள், இறைவேண்டல் நிகழ்வுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல் பயிலரங்குகள், தியானம், சமூகப்பணி மற்றும் அர்மேனிய கிறிஸ்தவ பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

மாநாட்டின் பொதுஒருங்கிணைப்பாளரான அருள்பணி அராம் அபிரகாமியன் அவர்கள், இளைஞர்களைத் திருஅவையின் வாழ்விலும் நற்செய்தி அறிவிக்கும் பணியிலும் மையமாகக் கருதும் திருஅவையின் அர்ப்பணிப்பை இந்த மாநாடு வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.

தொடக்க நாளில் இடம்பெற்ற ஆன்மிகப் பயிற்சி அமர்வில், அருள்சகோதரி ரீட்டா சியாதா, "இறைவனில் வேரூன்றிய இதயம்" என்ற தலைப்பில் கருத்துரை மற்றும் பயிலரங்கை நடத்தி, இறைவனுடனான ஆழமான தனிப்பட்ட உறவே ஒவ்வொரு கிறிஸ்தவ அழைப்புக்கும் மறைப்பணிக்கும் அடித்தளமாகும் என்பதை வலியுறுத்தினார்.

இந்த மாநாடு ஆகஸ்ட் 2, ஞாயிறன்று, ப்ஸோம்மார் அன்னை மரியாள் மடாலயத்தில் முதுபெரும்தந்தை மினாசியன் அவர்கள் தலைமையில் நடைபெறும் சிறப்பு திருப்பலியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

01 ஆகஸ்ட் 2026, 13:36