தேடுதல்

மேற்குக் கரையில் ரமல்லாவுக்கு வடகிழக்கே உள்ள தாய்பே. மேற்குக் கரையில் ரமல்லாவுக்கு வடகிழக்கே உள்ள தாய்பே.  (AFP or licensors)

தயவுசெய்து தாய்பேவை மறந்துவிடாதீர்கள்: மேற்குக் கரை கிறிஸ்தவர்கள் பாதுகாப்பு கோரிக்கை

பாலஸ்தீனத்தின் கடைசி கிறிஸ்தவ கிராமமான தாய்பே, இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தொடர் அத்துமீறல்கள், வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்படுவதுடன், மக்களின் நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதனால் சில கிறிஸ்தவ குடும்பங்கள் தங்கள் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

பாலஸ்தீனத்தின் கடைசி முழுமையான கிறிஸ்தவ கிராமமான தாய்பே (Taybeh), இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் தொடர் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. தாய்பே கிறிஸ்து மீட்பர் ஆலயத்தின் பங்குத்தந்தை அருள்பணி பஷார் ஃபவாட்லேஹ் அவர்கள், அனைத்துலக  சமூகமும் உலகளாவிய திருஅவையும் தாய்பே மக்களின் நிலை குறித்து மௌனம் காக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 5ஆம் நாள், ஒரு கிறிஸ்தவ குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டிற்குள் குடியேற்றவாசிகள் பலமுறை அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து, வீட்டருகே ஆடுகளை கொண்டு வந்ததுடன், வேலியையும் சேதப்படுத்தினர். தாய்பேவின் பல பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு தீ வைப்பது, சொத்துகளை அழிப்பது, சாலைகளை மூடுவது மற்றும் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், “நாங்கள் மறக்கப்பட்டவர்களாகவும் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் உணர்கிறோம்” என்று அருள்பணி பஷார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சில குடும்பங்கள் தங்களது பூர்வீக நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இருப்பினும், பல்வேறு கிறிஸ்தவ திருஅவைகள் ஒன்றிணைந்து மக்களுக்கு ஆதரவளித்து வருகின்றன. இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையும், உலகளாவிய திருஅவையின் ஜெபங்களும் அவர்களுக்கு நம்பிக்கையளிக்கின்றன.

தாய்பே திருவிவிலியத்தில்  குறிப்பிடப்படும் எப்ராயீம் (Ephraim) என அடையாளப்படுத்தப்படுகிறது. இயேசுவும் அவரது சீடர்களும் தஞ்சம் அடைந்த இடமாக இது பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. எனவே, தாய்பே புனித பூமியில் கிறிஸ்தவத்தின் தொடர்ச்சியான இருப்பின் முக்கிய அடையாளமாக விளங்குகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

11 ஆகஸ்ட் 2026, 13:56