தேடுதல்

சான் மரினோ மற்றும் ரிமினிக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை சான் மரினோ மற்றும் ரிமினிக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை 

சான் மரினோ மற்றும் ரிமினிக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை!

திருத்தந்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி சான் மரினோ மற்றும் ரிமினிக்கு மேய்ப்புப் பணி பயணம் மேற்கொள்ள உள்ளார். சான் மரினோவில் அரசு அதிகாரிகளைச் சந்தித்து, நற்கருணை ஆராதனையில் பங்கேற்று, புனித மரினோவின் திருப்பண்டங்களை வணங்குவார். பென்னாபில்லியில் உள்ள அகுஸ்தீனிய அருட்சகோதரிகளையும் தனிப்பட்ட முறையில் சந்திப்பார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆகஸ்ட் 22ஆம் நாள் சான் மரினோ குடியரசு மற்றும் ரிமினிக்கு மேய்ப்புப் பணி பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது. இப்பயணத்தில் அரசு அதிகாரிகளைச் சந்தித்தல், இறைவேண்டல், நலிவுற்ற மக்களைச் சந்தித்தல் மற்றும் திருப்பலி நிறைவேற்றுதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

சான் மரினோவில் திருத்தந்தை அரசு செயலர்களையும், ஆட்சித் தலைவர்களையும், பெரிய மற்றும் பொது மன்ற உறுப்பினர்களையும் சந்திப்பார். அரச அரண்மனையின் மைய பால்கனியில் இருந்து மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, திருத்தூதரின் ஆசீரையும் வழங்குவார். பின்னர் சான் மரினோ பேராலயத்தில் நற்கருணை ஆராதனையில் பங்கேற்று, புனித மரினோவின் திருப்பண்டங்களை அருள்பணியாளர்கள், அர்ப்பணிக்கப்பட்டோர் மற்றும் மறைமாவட்டப் பிரதிநிதிகளுடன் இணைந்து வணங்குவார்.

மேலும், இரண்டாம் உலகப்போரின்போது துன்புறுத்தப்பட்ட துறவியருக்கும் இடம்பெயர்ந்த குழந்தைகளுக்கும் அடைக்கலம் வழங்கிய பென்னாபில்லியில் உள்ள அகுஸ்தீனிய அருட்சகோதரிகளின் மடத்திற்குத் திருத்தந்தை தனிப்பட்ட முறையில் சென்று சந்திப்பார்.

ரிமினியில் புனித அகுஸ்தீன் மற்றும் லியோன் ஹார்மெல் குறித்த கண்காட்சிகளைப் பார்வையிட்டு, ‘மக்களிடையே நட்புறவுக்கான சந்திப்பு’ நிகழ்வில் பங்கேற்போரையும் சந்திப்பார். பின்னர் ரிமினி பேராலயத்தில் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் காரித்தாஸ் அமைப்பின் உதவியைப் பெறும் வறுமையில் வாழும் மக்களைச் சந்திப்பார்.

மாலை மணி 6.30 க்கு துறைமுகச் சதுக்கத்தில் திருப்பலி நிறைவேற்றுவதுடன் திருத்தந்தையின் பயணம் நிறைவடையும். இரவு 9 மணிக்கு அவர் வத்திக்கானுக்குத் திரும்புவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

13 ஆகஸ்ட் 2026, 14:01